உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிலீக்ஸ்: புலிகள் சரணடைவதை இலங்கை நிராகரித்தது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், மே 11, 2011

ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப்புலிகள் சரணடைவதாகத் தெரிவித்தபோது இலங்கை அரசாங்கம் அக்கோரிக்கையை நிராகரித்ததாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல் கசிந்துள்ளது.


அமெரிக்காவின் அழுத்தத்தின் பேரில் கோரப்பட்ட சரணடைதலை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் "நாம் அந்நிலையைக் கடந்து விட்டோம்" என்று கூறியதாகவும் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.


அத்துடன் பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் போர்ப் பகுதிக்குச் செல்லவும் அது தடை விதித்ததாகவும் அமெரிக்க அரசுத் தகவல்கள் மூலம் கசிந்துள்ளது.


இலங்கை அரசு இத்தகைய குற்றச்சாட்டுகளை எப்போது மறுத்தே வந்துள்ளது.


ஆஃப்டென்போஸ்டன் என்ற நோர்வே செய்திப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள இத்தகவல்களின் படி, 2009 மே 16 ஆம் நாள் இலங்கையின் நோர்வே தூதுவர் அமெரிக்கத் தூதுவருக்கு தொலைபேசி மூலம் புலிகள் எவ்வித நிபந்தனையும் இன்றி சரணடைய விரும்புவதாகத் தம்மிடம் புலிகளின் பன்னாட்டு முகவர் கேபி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.


இதனை அடுத்து அமெரிக்கத் தூதுவர் செஞ்சிலுவைச் சங்கத்துடன் தொடர்பு கொண்ட போது அவர்களின் ஊழியர்கள் சரணடைவதை உறுதிப்படுத்த இராணுவ உலங்குவானூர்தி மூலம் போர்ப்பகுதிக்குச் செல்ல ஆயத்தமாக இருப்பதாகத் தெரிவித்திருந்தது.


செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கைக்கான முகவர் போல் கொஸ்டெலோ புலிகள் சரணடைவது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் தகவல் அனுப்பினார். அதற்கு கோத்தபாய சரணடையத் தயாராக இருக்கும் புலிகளின் பெயர்களைத் தருமாறு அவர் கேட்டதாகவும், ஆனால் அப்பெயர்ப் பட்டியலை நோர்வே தரப்புக்கு புலிகளின் தரப்பு வழங்கவில்லை என்றும் செய்திகள் கசிந்துள்ளன.


மூலம்

[தொகு]