விண்மீனைச் சுற்றி கரிம 'விண்பந்துகள்' கண்டுபிடிக்கப்பட்டன

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வெள்ளி, சூலை 23, 2010


C60 (பக்கிபந்து - Buckminister Fullerene) மூலக்கூற்றின் சுழலும் வடிவம்

தூர விண்மீன் ஒன்றைச் சுற்றியுள்ள அண்டத்தூசியிடையே முன்னெப்போதும் கண்டிராத பெரும் துணிக்கைகளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்த செய்தி நேற்றைய "சயன்ஸ்" அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


கனடாவின் மேற்கு ஒண்டாரியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜான் காமி என்பவரின் தலைமையில் நாசாவின் ஸ்பிட்சர் அகச்சிவப்புத் தொலைநோக்கி உதவியுடன் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


"பக்கிபந்து" (buckyball) என அழைக்கப்படும் காற்பந்து போன்ற கூண்டு வடிவிலான கரிம மூலக்கூறுகள் 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்டன. பூமியில் இவை விண்வீழ்கல், மற்றும் சில கனிமங்களில் காணப்படுகின்றன.


அன்று இதனைக் கண்டுபிடித்த அறிவியலாளர்கள் குரோட்டோ, கர்ல், சுமாலி (Kroto, Curl, Smalley) ஆகியோருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது. இவை அண்டத்தில் இருப்பதாக அப்போது நம்பப்பட்டது. ஆனாலும் அது கண்டுபிடிக்கப்படுவதற்கு 25 ஆண்டுகள் பிடித்திருக்கிறது. இந்த மூலக்கூற்றின் கூண்டு வடிவம் புகழ்பெற்ற கட்டிடவியல் அறிஞர் பக்மின்ஸ்டர் ஃபுல்லர் என்பவர் 1967 இல் உருவாக்கிய கூண்டு வடிவம் போல் இருந்ததால் அவர் பெயரைச் சூட்டினர். அவர் நினைவாக இம்மூலக்கூறுக்கு பக்மினிசிட்டர் ஃபுல்லரீன் என்று பெயரிடப்பட்டது. இது சுருக்கமாக "பக்கிபால்" (Buckyball) என்றும் அழைக்கப்படுகின்றது.


இந்த மூலக்கூறுகள் "மூன்றாம் வகைக் கரிமம்" ஆகும். முதல் இரண்டும் கிரபைட்டு, மற்றும் வைரம் ஆகியனவாகும்.


முப்பரிமாணத்தில் அடுக்கப்பட்ட 60 கரிம அணுக்களை இந்தக் "கரிமப்பந்து" (கரிமக்கூண்டு) கொண்டுள்ளது. இவ்வணுக்கள் அனைத்தும் அறுகோண, மற்றும் ஐங்கோண வடிவில் ஒன்றோடொன்று பிணைந்து கால்பந்து வடிவில் கூண்டுபோல உள்ளன.


"இவை பல வழிகளில் அலைந்து கொண்டும், அதிர்ந்து கொண்டும் குறிப்பிட்ட அலைநீளங்களில் அகச்சிவப்பு (infrared) ஒளியுடன் இடைத்தாக்கத்தில் ஈடுபட்டுள்ளன," என பேராசிரியர் காமி விளக்கினார்.


அந்தக் குறிப்பிட்ட அலைநீளத்தில் உமிழ்வை தொலைநோக்கியில் அவதானித்த போது விண்ணில் இருந்து மாபெரும் மூலக்கூறுகளில் இருந்து சைகைகளைத் தாம் காண்பதை பேராசிரியர் காமி உணர்ந்தார்.


6,500 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள ஆரா என்ற விண்மீன் தொகுதியில் உள்ள விண்மீன் ஒன்றில் இருந்து இந்த சைகை வந்தது.


"புதிய வகை மூலக்கூறு ஒன்று அங்கு இருப்பதை இது உறுதிப்படுத்தியது," என்றார் பேராசிரியர் காமி.


பக்கிபந்தைக் கண்டுபிடித்தமைக்காக 1996 இல் நோபல் பரிசு பெற்ற சேர் ஹரி குரோட்டோ இந்தப் புதிய கண்டுபிடிப்பைப் பாராட்டியுள்ளார். "நான் முன்னர் சந்தேகப்பட்டது, இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். எமது உடலில் உள்ள கரிமம் அண்டத்தூசியில் இருந்து வந்தவையே. எனவே, இந்தக் கரிமங்களில் சில இந்தக் கரிமப்பந்துகளில் இருந்து வந்திருக்கலாம்," என அவர் தெரிவித்தார்.


ஏற்கனவே தெரிந்த பக்கிபோல்களின் இயல்புகளைப் பயன்படுத்தி இதன் மூலம் அண்டத்தில் இயற்பியல், மற்றும் வேதியியல் பகுப்புகளை அறிவதற்கு ஆய்வாளர்கள் தற்போது முயன்று வருகிறார்கள்.

மூலம்[தொகு]

Bookmark-new.svg