விண்வெளியில் உள்ள கழிவுகளை அகற்ற சுவிட்சர்லாந்து செயற்கைக்கோள் தயாரிக்கிறது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, பெப்பிரவரி 17, 2012

விண்வெளியில் உள்ள கழிவுப் பொருட்களை எடுத்து வர சுவிட்சர்லாந்து அறிவியலாளர்கள் செயற்கைக்கோள் ஒன்றைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக புதன்கிழமை அன்று அறிவித்துள்ளனர். இக்கழிவுப் பொருட்கள் பூமியின் சுற்றுப்பாதையில் பூமியை வலம் வந்து கொண்டிருப்பதால் இவற்றால் செயற்கைக்கோள்களுக்கும், மனிதப் பயணங்களுக்கும் பெரும் ஆபத்து விளையலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.


விண்வெளிக் கழிவுகள்

கிளீன்ஸ்பேஸ் வன் (CleanSpace One) என அழைக்கப்படும் இச்செயற்கைக் கோள் 10 மில்லியன் பிராங்கு செலவில் சுவிசு விண்வெளி மையத்தினால் தயாரிக்கப்படவுள்ளது. மூன்று முதல் ஐந்தாண்டு காலத்துக்குள் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் சுவிட்சர்லாந்தினால் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு இப்போது செயலிழந்துள்ள இரண்டு செயற்கைக்கோள்களின் எச்சங்களை மீட்பது இத்திட்டத்தின் முதற் பணியாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.


பழுதடைந்த ஏவுகணைகள், உடைந்த செயற்கைக்கோள்கள் என ஏறத்தாழ 500,000 கழிவுப் பொருட்கள் பூமியை வலம் வருவதாக நாசா தெரிவித்துள்ளது. இவை கிட்டத்தட 28,000 கிமீ/மணி வேகத்தில் பூமியைச் சுற்றி வருகின்றன. இதனால் விண்கலங்களுக்கும், செயற்கைக்கோள்களுக்கும் பெரும் பாதிப்பை இவை உண்டு பண்ணும்.


1996 ஆம் ஆண்டில் பிரெஞ்சு செயற்கைக்கோள் ஒன்று இவ்வாறான கழிவுப் பொருள் மோதியதனால் சேதமுற்றது. இதே போன்று 2009 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் செயற்கைக் கோள் ஒன்று உருசியாவினால் கைவிடப்பட்ட செயற்கைக்கோள் ஒன்றுடன் மோதியதில் அழிந்தது. 2007 ஆம் ஆண்டில் சீனா தான் ஏவிய செயற்கைக்கோள் ஒன்றை சோதனைக்காக எவுகணை மூலம் மோதிச் சேதப்படுத்தியதில், அச்செயற்கைக்கோள் 150,000 சிறிய துண்டுகளாக விண்வெளிக் கழிவுகளில் சேர்ந்தது.


இவ்வாறான கழிவுகளால் விண்வெளியின் சுற்றுச்சூழல் பாதிப்படைவது குறித்து அமெரிக்க அரசுச் செயலர் இலரி கிளிண்டன் கடந்த மாதம் எச்சரித்திருந்தார். இது குறித்து முறைசாரா விதிகளைக் அமுல்படுத்துவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் அமெரிக்கா கலந்துரையாடும் என அவர் தெரிவித்திருந்தார்.


மூலம்[தொகு]