உள்ளடக்கத்துக்குச் செல்

வில்லியம் - கேத்தரின் மிடில்டன் திருமணம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து
(வில்லியம் - கேத் மிடில்டன் திருமணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வியாழன், ஏப்பிரல் 28, 2011

வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸ்- டயானா தம்பதியின் மூத்த மகன் இளவரசர் வில்லியம் - கேத்தரின் மிடில்டன் திருமணம் லண்டனில் நாளை 29-ந் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.


இடது: இளவரசர் வில்லியம்
வலது: கேட் மிடில்டன்

நீண்ட இடைவெளிக்குப்பின் அரச குடும்பத்தில் நடைபெறும் முக்கிய திருமணம் என்பதால், இங்கிலாந்து மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். திருமணம் நடைபெறும் வெஸ்ட்மின்ஸ்டர் அபி பகுதியில், மக்கள் இப்போதே உற்சாகத்துடன் குவியத் தொடங்கியுள்ளனர். இங்கிலாந்து மக்கள் சுமார் 6 லட்சம் பேர் லண்டனில் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலை முழுவதும் தேசிய கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


இளவரசர் வில்லியம் புனித ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் படித்தபோதுதான் முதன் முதலாக கேத்தரின் மிடில்டனை சந்தித்தார். அப்போது இருந்தே இவர்கள் இருவரும் காதலிக்கத் தொடங்கினர். கேத்தரின் மிடில்டனுக்கு 29 வயதாகிறது. இவர் வில்லியமை விட 5 மாதங்கள் மூத்தவர்.


லண்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள கிறித்தவத் தேவாலயத்தில் இங்கிலாந்து நேரப்படி பகல் 11 மணிக்கு (இந்திய நேரம் மாலை 4.30 மணி) திருமணம் நடக்கிறது. திருமண விழாவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து 1900 முக்கிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டு உள்ளனர். திருமண நிகழ்ச்சி இங்கிலாந்து நேரப்படி காலை 8.15 மணிக்கு தொடங்குகிறது. அப்போது முதல் விருந்தினர்கள் தேவாலயத்துக்கு வருவார்கள். 9.50 மணிக்கு பிரதமர் மற்றும் பொதுநலவாய நாடுகளின் ஆளுநர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள் வருவார்கள். 10.10 மணிக்கு இளவரசர் வில்லியம் தனது சகோதரர் ஹாரியுடன் பக்கிங்காம் அரண்மனையில் இருந்து தேவாலயத்துக்கு வருகிறார். 10.20 மணிக்கு மணமகள் கேத்தரின் தாயார், சகோதரர் ஆகியோர் தேவாலயத்துக்கு வந்து சேருவார்கள். 10.35 மணிக்கு இளவரசர் சார்லசும், 10.40 மணிக்கு ராணி எலிசபெத்தும் தேவாலயத்தை வந்தடைவார்கள்.


10.51 மணிக்கு மணமகள் கேதரீன் தான் தங்கியிருக்கும் கோரிங் ஓட்டலில் இருந்து தனது தந்தையுடன் தேவாலயத்துக்கு வருவார். 11 மணிக்கு திருமண நிகழ்ச்சிகள் தொடங்கி 12.15 மணி வரை நடைபெறுகிறது. 12.15 மணிக்கு மணமக்கள் சாரட் வண்டியில் பக்கிங்காம் அரண்மனைக்கு அழைத்து செல்லப்படுவார்கள். 12.30 மணிக்கு மணமக்கள் அரண்மனைக்கு வந்து சேருவார்கள். 1.25 மணிக்கு மணமக்கள் மற்றும் ராணி எலிசபெத் ஆகியோர் அரண்மனை மாடத்தில் பொதுமக்களின் முன் தோன்றுவார்கள். இத்துடன் திருமண நிகழ்ச்சிகள் நிறைவு பெறும். அதைத் தொடர்ந்து விமானப்படை விமானங்களின் அணி வகுப்பு நடக்கிறது. இங்கிலாந்து அரச குடும்பத்தின் திருமண நிகழ்ச்சியை உலகம் முழுவதும் சுமார் 200 கோடி பேர் தொலைக்காட்சி மூலம் கண்டு களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


மூலம்

[தொகு]