வெனிசுவேலாவில் வன்முறைகளை அடக்க காவல்துறையினருக்கு அரசுத்தலைவர் உத்தரவு
- 31 மார்ச்சு 2017: வெனிசுவேலா நீதிமன்றம் சட்டமியற்றும் அதிகாரத்தை பெற்றது
- 4 பெப்பிரவரி 2016: சிகா தீநுண்மம் காய்ச்சல் உடலுறவு மூலமும் பரவுகிறது
- 7 திசம்பர் 2015: வெனிசுவேலா தேர்தலில் எதிர்க்கட்சி பெரும்பான்மை பலத்தைப் பெற்றது
- 16 பெப்பிரவரி 2014: வெனிசுவேலாவில் வன்முறைகளை அடக்க காவல்துறையினருக்கு அரசுத்தலைவர் உத்தரவு
- 29 திசம்பர் 2013: வெனிசுவேலாவில் அனைவருக்கும் வீடு
ஞாயிறு, பெப்பிரவரி 16, 2014
வெனிசுவேலாவின் தலைநகர் கரக்காசில் அரசுத்தலைவர் நிக்கொலாசு மதுரோவின் ஆதரவாளர்களும், எதிர்க்கட்சியினரும் தமக்கிடையே மோதிக்கொண்டதை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினர்.
வெனிசுவேலாவில் அதிகரித்து வரும் அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில் அந்நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது கடந்த புதன்கிழமை மூன்று பேர் கொல்லப்பட்டனர். கலவரங்களில் ஈடுபட்ட 100 இற்கும் அதிகமான மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாட்டு மக்களுக்கு மதுரோ உரையாற்றும் போது, வன்முறைகளுக்கு எதிர்க்கட்சியினரே காரணம் எனக் கூறினார். "எனது ஆதரவாளர்கள் அனைவருக்கும் அறைகூவல் விடுக்கிறேன். நாட்டில் அமைதி வேண்டி உடனடியாக வீதிகளில் இறங்குங்கள்," என அவர் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் லெப்போல்டோ லோப்பசுவைத் தேடிக் காவல்துறையினர் வலை விரித்துள்ளனர். வன்முறையில் ஈடுபடும் சிறுவர்களுக்கு இவரே பயிற்சி கொடுத்தார் என்றும், தற்போது அவர் ஓடி ஒளிந்து விட்டார் என்றும் மதுரோ கூறினார். கடந்த புதன்கிழமை அவருக்கு எதிராகப் பிடி ஆணை கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் பொது இடங்களில் காணப்படவில்லை என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு ஏப்ரலில் இடம்பெற்ற தேர்தலில் மதுரோ மிகச் சிறிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தார். மதுரோவின் இடதுசாரிக் கொள்கைகள் நாட்டில் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அதிகாரபூர்வமான தகவல்களின் படி, 2013 ஆம் ஆண்டில் பணவீக்கம் 56.2% ஆக இருந்தது.
மூலம்
[தொகு]- Venezuela cracks down on violent protests, அல்ஜசீரா, பெப்ரவரி 16, 2014
- Pro and anti-Maduro marches gather thousands in Venezuela, பிபிசி, பெப்ரவரி 16, 2014