வெனிசுவேலா தேர்தலில் எதிர்க்கட்சி பெரும்பான்மை பலத்தைப் பெற்றது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், திசம்பர் 7, 2015

தென்னமெரிக்க நாடான வெனிசுவேலாவில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. இந்நாடு கடந்த 17 ஆண்டுகளாக சோசலிஸ்டுகளின் ஆட்சியில் இருந்தது.


வாக்கெடுப்பு முடிவடைந்த ஐந்து மணித்தியாலங்களுக்குள் 99 இடங்களை எதிர்க்கட்சியினர் கைப்பற்றினர். சோசலிஸ்டுகள் 46 இடங்களைக் கைப்பற்றினர். 22 இடங்களுக்கு முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பழமைவாத எதிர்க்கட்சியினர் குறைந்தது 112 இடங்களைக் கைப்பற்றுவர் எனக் கூறப்படுகிறது.


அரசுத்தலைவர் நிக்கொலாசு மதுரோ தோல்வியை ஒப்புக் கொண்டார். தேர்தல் முடிவுகளைத் தமது கட்சி ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


ஆனாலும், வெனிசுவேலாவின் தற்போதைய சனாதிபதி ஆட்சி முறையில், ஆளும் ஐக்கிய சோசலிசக் கட்சி உள்ளூராட்சி சபைகளின் பெரும்பாலான இடங்களைத் தன் கைவசம் வைத்துள்ளது. ஐக்கிய சோசலிசக் கட்சி நாட்டின் பொருளாதாரம், மற்றும் எண்ணெய் வளத்தை சரியான முறையில் நிருவகிக்கவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.


எதிர்க்கட்சித் தலைவர் லோப்பசு நாட்டில் வன்முறைகளைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு இவ்வாண்டு ஆரம்பத்தில் அவருக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அரசியல் காரணங்களுக்காகவே இவர் கைது செய்யப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் அரசைக் குற்றம் சுமத்தியுள்ளனர்.


மூலம்[தொகு]