வெள்ளியில் ஓசோன் படலம் கண்டுபிடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, அக்டோபர் 8, 2011

வெள்ளிக் கோளில் ஓசோன் படலம் இருப்பதை அறிவியலாளர் கண்டுபிடித்துள்ளனர்.


வெள்ளி (கோள்)

பூமியில் காணப்படும் படலத்தை விடக் குறைவான அடர்த்தி கொண்டதாகவே வெள்ளியில் ஓசோன் படலம் காணப்படுகிறது. ஐரோப்பாவின் ஈசா நிறுவனத்தின் வீனஸ் எக்ஸ்பிரஸ் என்ற விண்கலம் இதனைக் கண்டுபிடித்துள்ளதாக இக்காரசு என்ற அறிவியல் இதழில் செய்தி வெளிவந்துள்ளது. வீனசு எக்ஸ்பிரஸ் விண்கலம் வெள்ளியின் வளிமண்டலத்தினூடாக விண்மீன்களை ஆராய்ந்த போதே ஓசோன் படலத்தைக் கண்டுபிடித்துள்ளது. தூரத்தேயுள்ள விண்மீன்களில் இருந்து வரும் புறவூதாக் கதிர்களின் பெரும் பகுதியை இந்த ஓசோன் படலம் உறிஞ்சி விடுவதால் இவ்விண்மீன்கள் தெளிவில்லாமலேயே தெரிகிறது.


இதுவரையில் பூமியிலும், செவ்வாயிலும் மட்டுமே ஓசோன் படலம் கண்டறியப்பட்டிருந்தது. ஏனைய கோள்களில் உயிரினங்களைக் கண்டுபிடிக்கும் வானியலாளர்களின் முயற்சிக்கு இக்கண்டுபிடிப்பு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வெள்ளியின் ஓசோன் படலம் வெள்ளியில் இருந்து 100 கிமீ உயரத்தில் உள்ளதாக பிரான்சின் லாட்மொஸ் ஆய்வு நிலையத்தைச் சேர்ந்த பிராங்க் மொண்ட்மெசின் தனது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இது பூமியினுடையதை விட மூன்று மடங்கு உயரமானதாகும்.


ஓசோன் படலம் என்பது ஒப்பீட்டளவில் உயர் செறிவுகளையுடைய ஓசோனைக் (O3) கொண்ட வளிமண்டலத்தில் உள்ள ஒரு படலம் ஆகும். பூமியில் வாழ்பவர்களுக்கு ஆற்றல் மிக்க சேதாரத்தை ஏற்படுத்தக் கூடிய சூரியனின் உயர் அதிர்வெண் புறாஊதா ஒளியினை 93% முதல் 99% வரை இப்படலம் உறிஞ்சுகிறது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]