வொயேஜர் 1 விண்கலம் சூரியக் குடும்பத்தைத் தாண்டிச் சென்றது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, செப்டெம்பர் 13, 2013

சூரியக் குடும்பத்தைத் தாண்டிச் சென்ற மனிதனால் உருவாக்கப்பட்ட முதலாவது பொருள் என்ற பெருமையை நாசாவின் வொயேஜர் 1 விண்கலம் பெற்றது.


வொயேஜர் விண்கலம்

விண்கலம் சூரியனின் உயர் வெப்ப வளிமக்குமிழை விட்டு வெளியேறி விண்மீன்களிடை வெளிக்குச் சென்றிருப்பதாக அறிவியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். 2012 ஆகத்து 25 இல் இது சூரியக் குடும்பத்தை விட்டு விலகிச் சென்றுவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர். அன்றைய நாளில் விண்கலம் 121 வானியல் அலகு தூரத்தில் சென்றது. இத்தூரம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையையான தூரத்தை விட 121 மடங்கு அதிகமாகும். அண்டக் கதிர்கள் விண்கலத்தைத் தாக்கும் எண்ணிக்கையைக் கொண்டே விண்கலம் எப்போது விண்மீனிடைவெளிக்குள் செல்லும் என்பதை அறிவியலாளர்கள் கணக்கிடுகிறார்கள்.


1977 ஆம் ஆண்டில் ஏவப்பட்ட வொயேஜர் 1 விண்கலம் வெளிக் கோள்களை ஆராயவே அனுப்பப்பட்டது, ஆனால் அது தற்போது அவற்றையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இன்று வரை இக்கலம் பூமியில் இருந்து 19 பில்லியன் கிமீ தூரம் சென்றுள்ளது. இக்கலத்தில் இருந்து அனுப்பப்படும் வானொலி சமிக்கை பூமியை அடைய 17 மணித்தியாலங்கள் எடுக்கிறது.


சூரியன்சூழ் வான்மண்டல எல்லையைத் தாண்டுவது ஒரு மிகப் பெரும் சாதனை, என ஆங்கிலேயெ வானியலாளர் பேராசிரியர் சேர் மார்ட்டின் ரீஸ் தெரிவித்தார். "1970களின் தொழில்நுட்பம் இப்பெரும் தூரத்தை அடைந்தது வியப்பை அளிக்கிறது," என அவர் கூறினார்.


வொயேஜர் 1 விண்கலம் 1977 செப்டம்பர் 5 ஆம் நாள் ஏவப்பட்டது. இதன் சகோதர விண்கலம் வொயேஜர் 2 1977 ஆகத்து 20 இல் ஏவப்பட்டது. இவற்றின் முதற் குறிக்கோள் வியாழன், சனி, யுரேனசு, நெப்டியூன் ஆகிய சூரியக் குடும்பத்தின் கோள்களை ஆராய்வதே. இப்பணியை அவை 1989 ஆம் ஆண்டில் நிறைவேற்றின. இதனை அடுத்து அவை நமது பால்வழி அண்டத்தின் நடுப்பகுதியை நோக்கி செலுத்தப்பட்டன. இவற்றில் இணைக்கப்பட்டுள்ள புளுட்டோனிய மின்கலங்கள் இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் செயலிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து பால்வழியில் இவை கட்டுப்பாடில்லாமல் செல்லும்.


வொயேஜர் 1 விண்கலம் எந்த ஒரு விண்மீனை நோக்கி செல்லவில்லை. ஆனாலும் அடுத்த 40,000 ஆண்டுகளுக்கு அது விண்மீன் எதனையும் அணுகாது. "வொயேஜர் 1 நமது விண்மீன் பேரடையின் மையத்தின் ஒழுக்கில் பல பில்லியன் ஆண்டுகளாக சுற்றி வரும்," என இத்திட்டத்தின் முதன்மை அறிவியலாளர் பேராசிரியர் ஸ்டோன் தெரிவித்தார்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]