ஹஜ்ஜுப் பயணிகளுக்கான மானியங்களைக் குறைக்க இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மே 8, 2012

அச்சுக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக மெக்கா செல்லும் இசுலாமியப் பயணிகளுக்கு இந்திய அரசு வழங்கும் மானியங்களைக் குறைக்குமாறு இந்திய உச்ச நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.


அல்-ஹராம் பள்ளிவாசலில் தொழும் ஒரு ஹாஜி.

தற்போது வழங்கப்படும் மானியங்களைப் படிப்படியாகக் குறைக்குமாறு கூறியுள்ள நீதிமன்றம், இன்னும் 10 ஆண்டுகளில் முற்றாக இல்லாதொழிக்குமாறு பணித்துள்ளது. அத்துடன் மெக்காவிற்கு அரசின் சார்பாக "நல்லெண்ணப் பயணம்" மேற்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையையும் 30 இலிருந்து இரண்டாகக் குறைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.


ஹஜ்ஜுப் புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்திய அரசு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய்களை வழங்கி வருகிறது. ஏர் இந்தியா மூலம் பயணம் செய்வதற்கு பயணிகள் இந்திய ஹஜ் அமைப்பு மூலம் விண்ணப்பிக்கலாம். ஆண்டுதோறும் 125,000 பேர் வரை இந்த சலுகைகளைப் பெறுகின்றனர். தில்லியில் இருந்து ஜெட்டா வரை செல்லுவதற்கு இவர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் 16,000 ரூபாய் வரை அறவிடப்படுகிறது. வழமையான பயணம் இதனை விட இரண்டு மடங்கு வரை செலவாகும்.


ஒருவருக்கு ஒரு முறையே மானியம் வழங்கப்படும் என சென்ற மாதம் இந்திய அரசு உச்சநீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது. தற்போது ஒவ்வொருவரும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மெக்கா செல்லுவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. அத்துடன் 70 வயதிற்கு மேலானவர்களுக்கும், முன்னர் எப்போது பயணம் மேற்கொள்ளாதவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.


மூலம்[தொகு]