115 ஆண்டுகளின் பின்னர் நியூசிலாந்தின் டொங்காரிரோ எரிமலை வெடித்தது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஆகத்து 7, 2012

ஒரு நூற்றாண்டு காலமாக உறக்கத்தில் இருந்த நியூசிலாந்தின் எரிமலை ஒன்று திடீரென வெடித்து சாம்பல்களை வெளியேற்றியது. வானூர்திப் பயணங்கள் தடைப்பட்டுள்ளன, சாலைகள் பல மூடப்பட்டுள்ளன.


டொங்காரிரோ எரிமலை

நியூசிலாந்தின் வடக்குத் தீவில் உள்ள மூன்று எரிமலைகளில் ஒன்றான டொங்காரிரோ எரிமலை நேற்றிரவு உள்ளூர் நேரம் நள்ளிரவுக்கு சற்றுப் பின்னர் திடீரென வெடித்தது. குண்டுவெடிப்பு போன்ற பலத்த சத்தத்துடன் பாறைகளும் நீராவியும் வெளியே வரத் தொடங்கின. 30 நிமிடங்கள் வரை நீடித்த இவ்வெடிப்பினால் உயிர்ச்சேதமோ அல்லது வேறு சேதங்களோ ஏற்பட்டதாக அறிவிக்கப்படவில்லை. வெளியேறிய சாம்பல் கிழக்குப் பக்கமாக பசிபிக் பெருங்கடலை நோக்கி நகர்ந்தது.


1,978 மீட்டர் உயரமான இந்த மலை நியூசிலாந்தின் தேசியப் பூங்காவும் ஆகும். இதனைப் பொதுவாக மலையேறிகள் பயன்படுத்துவர்.


டொங்காரிரோ எரிமலை கடைசியாக 1896 நவம்பரில் வெடித்து 1897 அக்டோபர் வரை நீடித்திருந்தது. நேற்றைய வெடிப்பை அடுத்து மேலும் வெடிப்புகள் ஏற்படுமா என்பதை அறிவியலாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.


மூலம்[தொகு]