உள்ளடக்கத்துக்குச் செல்

1948 மலேசியப் படுகொலைகளை மீள விசாரிக்க பிரித்தானியா முடிவு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, செப்டெம்பர் 9, 2011

1948 ஆம் ஆண்டில் பிரித்தானியப் படையினரால் மலேசியாவில் நிகழ்த்தப்பட்ட 24 கிராமவாசிகளின் படுகொலைகளை மீள் விசாரிக்க லண்டனின் உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.


மலாயா பிரித்தானியப் பேரரசின் ஆட்சியில் இருந்த போது பட்டாங் காலி என்ற இடத்தில் இப்படுகொலைகள் இடம்பெற்றன. இவ்வாறு கொலை செய்யப்பட்ட சீன இனத்தவர்களின் குடும்பத்தினர் பொது விசாரணைக்காகவும், நட்டஈட்டுக்காகவும் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.


அப்போது கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகள் என்றும் தம்மிடம் இருந்து தப்பி ஓடியபோதே கொல்லப்பட்டார்கள் என்றும் பிரித்தானியா கூறி வருகிறது. கம்யூனிசப் போராளிகளின் கிளர்ச்சியின் போதே இப்படுகொலைகள் நடத்தப்பட்டன. இக்கிளர்ச்சி 1950களின் இறுதி வரையில் நீடித்திருந்தது.


அன்றைய மலேய சட்டமா அதிபர் தமது படைகளின் செய்கையை நியாயப்படுத்தியிருந்தார். இந்நிகழ்வு 1970 ஆம் ஆண்டு வரையில் மறக்கப்பட்டிருந்தது. 1970 இல் பிரித்தானியப் பத்திரிகை ஒன்று இப்படுகொலைகள் குறித்து பிரித்தானிய படையினரின் வாக்குமூலங்களை வெளியிட்டு சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் போராளிகள் அல்லவென்றும், அவர்கள் அனைவரும் கிராமவாசிகளே என்று செய்தி வெளியிட்டிருந்தது.


இதனை அடுத்து முழுமையான விசாரணை நடைபெறும் என பிரித்தானியா அறிவித்திருந்தும், பின்னர் ஆட்சி மாறிய அரசுகள் அதனைக் கவனிக்கத் தவறிவிட்டன.


2012 ஆம் ஆண்டு முற் பகுதியில் முழுமையான விசாரணைகள் தொடங்கும் என இறந்தவர்களின் குடும்பத்தினருக்காக வாதாடும் வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]