1953 ஈரான் இராணுவப் புரட்சியில் சிஐஏ இன் பங்கு குறித்து அமெரிக்கா தகவல்
- 18 பெப்பிரவரி 2018: இரான் நாட்டின் வானூர்தி மலையில் மோதி விபத்துக்குள்ளானது
- 7 சனவரி 2018: ஈரானிய எண்ணெய் கப்பல் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் 32 பேரை காணவில்லை
- 28 சனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு
- 17 சனவரி 2016: ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடை விலக்கப்பட்டது
- 26 அக்டோபர் 2013: ஈரான் 'பழி வாங்கும் நடவடிக்கையாக' 16 போராளிகளைத் தூக்கிலிட்டது
செவ்வாய், ஆகத்து 20, 2013
1953 ஆகத்து மாதத்தில் ஈரானியப் பிரதமர் முகம்மது மொசாடெக்கின் ஆட்சியைக் கவிழ்த்த இராணுவப் புரட்சியில் அமெரிக்கப் புலனாய்வு நிறுவனம் சிஐஏ முக்கிய பங்கு வகித்ததாக அந்நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. பிரித்தானியரின் வசமிருந்த ஈரானின் எண்ணெய் வளங்களை ஈரான் தேசிய மயமாக்க முடிவு செய்ததை அடுத்தே இந்த ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெற்றது.
இராணுவப் புரட்சியின் 60வது ஆண்டு நிறைவையொட்டி இப்புரட்சி பற்றிய சிஐஏ இன் ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
"அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்கிணங்க சிஐஏயின் நேரடி அறிவுறுத்தலின் படி இராணுவப் புரட்சி மேற்கொள்ளப்பட்டது," என ஆவணம் தெரிவிக்கிறது.
இரண்டாம் உலகப் போரின் பின்னரான தமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி அன்றைய ஈரானிய எண்ணெயிலேயே தங்கியுள்ளது என பிரித்தானியர் நம்பியிருந்தனர்.
ஆட்சிக் கவிழ்ப்பில் அமெரிக்காவின் பங்கு குறித்து ஏற்கனவே 2000 ஆம் ஆண்டில் அன்றைய அமெரிக்க அரசுச் செயலாளர் மடெலின் ஆல்பிறைட், 2009 ஆம் ஆண்டில் பராக் ஒபாமா ஆகியோர் சுட்டிக் காட்டியிருந்தனர். ஆனாலும், இப்பங்களிப்புக் குறித்து சிஐஏ நிறுவனம் மறுப்புத் தெரிவித்து வந்திருந்தது.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜோர்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகம் இத்தகவல்களைப் பெற்றிருக்கிறது.
1951 ஆம் ஆண்டில் மொசாடெக் சனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது அரசுத் தலைவரானார். அவர் பதவிக்கு வந்ததும் எண்ணெய் வளத்தை அரசுடைமையாக்க முடிவு செய்தார். அன்றைய பனிப்போர்க் காலத்தில் இது சோவியத் ஒன்றியத்தின் பலத்தை மத்திய கிழக்கில் அதிகரிக்கச் செய்யும் என மேற்கு நாடுகள் கருதின. இதனை அடுத்து மொட்சாடெக்குக்கு எதிரான கருத்துகள் ஈரானிய, அமெரிக்க ஊடகங்களில் பரப்பப்பட்டன.
1953 ஆகத்து 15 முதல் 19 வரை இடம்பெற்ற இந்த ஆட்சிக் கவிழ்ப்பு ஏஜாக்சு நடவடிக்கை எனப் பெயரிடப்பட்டது. வெளிநாட்டில் தங்கியிருந்த முகம்மத் ரிசா ஷா பாலவி இப்புரட்சியை அடுத்து நாடு திரும்பி அமெரிக்க ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவர் 1979 ஆம் ஆண்டு இசுலாமியப் புரட்சி இடம்பெறும் வரை பதவியில் இருந்தார்.
மூலம்
[தொகு]- CIA admits organising 1953 Iran coup, அல்ஜசீரா, ஆகத்து 20, 2013
- CIA documents acknowledge its role in Iran's 1953 coup, பிபிசி, ஆகத்து 20, 2013