2012 ஆஸ்திரேலிய திறந்த சுற்று ஆண்கள் இறுதிப் போட்டியில் ஜோக்கொவிச் வெற்றி

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சனவரி 30, 2012

2012 ஆம் ஆண்டுக்கான ஆத்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் செர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோக்கொவிச், எசுப்பானியாவின் ராஃபாயெல் நடாலை 5-7, 6-4, 6-2, 6-7, (5-7), 7-5 என்ற கணக்கில் மொத்தம் 5 மணி 53 நிமி விளையாடி வென்றார். இதன் மூலம் அவர் தனது 5வது கிராண்ட் சிலாம் வெற்றியைப் பெற்றார்.


நோவாக் ஜொக்கோவிச்

டென்னிசு பெருவெற்றித் தொடர் ஒன்றின் இறுதி ஆட்டத்தில் அதிகளவு நேரம் எடுத்துக்கொண்ட ஆட்டமும் இதுவே ஆகும். ஆத்திரேலியாவின் விக்டோரியா மாநிலத் தலைநகர் மெல்பேர்ணில் ரொட் லேவர் அரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஆரம்பமான ஆட்டம் இன்று உள்ளூர் நேரம் அதிகாலை 01:37 மணிக்கு ஆட்டம் முடிவடைந்தது.


ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் ஜோகோவிச் முதல் தர நிலையில் உள்ளார். 2-ம் இடத்தில் நடால் உள்ளார். 24 வயதான ஜொக்கோவிச் ஆத்திரேலிய திறந்த சுற்றை வெல்வது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2008 மற்றும் 2011-ம் ஆண்டும் வென்றிருக்கிறார். அடுத்த சூன் மாதத்தில் இடம்பெறும் பிரெஞ்சு ஓப்பன் போட்டியில் ஜோக்கோவிச் வெற்றி பெறுவாரானால் அனைத்து நான்கு பெருவெற்றித் தொடர்களையும் கைப்பற்றிய வீரராவார்.


நடால் ஜொக்கோவிச்சுக்கு எதிராக இதுவரை மோதிய 30 ஆட்டங்களில் 16-ல் வெற்றி கண்டிருக்கிறார். இருப்பினும் கடைசியாக ஜொக்கோவிச்சை சந்தித்த 7 மோதல்களிலும் தோல்வியையே தழுவியிருக்கிறார். இவை அனைத்துமே இறுதிச் சுற்று ஆட்டங்களாகும்.


சனிக்கிழமை நடந்த பெண்களுக்கான இறுதிப் போட்டியில் பெலருசைச் சேர்ந்த விக்டோரியா அசரென்கா உருசியாவைச் சேர்ந்த மரியா சரப்போவாவை 6-3, 6-0 என்ற நேர்சுற்றில் வென்று தனது முதலாவது கிராண்ட் சிலாம் வெற்றியைப் பெற்றார்.


மூலம்[தொகு]