2009 வங்காளதேசக் கிளர்ச்சி: 723 காவல்துறையினருக்கு சிறைத்தண்டனை

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, அக்டோபர் 21, 2012

2009 ஆம் ஆண்டில் வங்காள தேசத்தில் இடம்பெற்ற கிளர்ச்சியில் பங்கு கொண்ட 723 பேருக்கு அந்நாட்டின் நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.


ஊதியம், மற்றும் வாழ்க்கைச் செலவு போன்ற காரணங்களுக்காக இடம்பெற்ற கிளர்ச்சியை அடுத்து கிட்டத்தட்ட 6,000 பேர் வரையில் கைது செய்யப்பட்டனர். இக்கிளர்ச்சியில் 74 பேர் கொல்லப்பட்டனர்.


மொத்தம் 735 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் இருவர் சிறையிலேயே இறந்து விட்டனர், மேலும் 10 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 723 பேரில் 64 இராணுவ வீரர்களுக்கு ஏழாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட 86 பேருக்கு எதிராகத் தனியான விசாரணைகள் இடம்பெறும் எனவும், இவர்கள் மரணதண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


இராணுவ விசாரணை மன்றத்தைக் கடுமையாக விமரிசித்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், கைது செய்யப்பட்ட பலர் சிறைச்சாலையில் சித்திரவதை செய்யப்பட்டதை அடுத்து இறந்துள்ளதாகக் குற்றம் சாட்டியது. இதனை மறுத்துள்ள இராணுவ வட்டாரம், சிறையில் மாரடைப்பு, மற்றும் இயற்கைக் காரணங்களுக்காகவே இறந்தனர் எனத் தெரிவித்துள்ளது.


தலைநகர் டாக்காவில் இடம்பெற்ற எல்லைக்காவல் படையினரின் கிளர்ச்சி 33 மணி நேரம் நீடித்தது. ஏனைய பிரதேசங்களிலும் கிளர்ச்சி பரவியது. இறந்தவர்களில் 57 பேர் இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் ஆவர்.


மூலம்[தொகு]