2010 இந்தியன் பிரிமியர் லீக் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஏப்பிரல் 26, 2010

மும்பையில் நேற்றிரவு நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக்கின் 2010 இற்கான இறுதி துடுப்பாட்டப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.


முன்னதாக பூவா தலையா போட்டுப் பார்த்ததில் வெற்றி பெற்ற சென்னை அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி, மட்டையாட்டத்தை தேர்வு செய்தார். தொடக்கம் முதலே நிதானமாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்களின் முடிவில் 168 ஓட்டங்களைக் குவித்தது. சுரேஸ் ரைனா சிறப்பாக விளையாடி 57 ஓட்டங்களை குவித்தார்.


இதன் பிறகு 169 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கட்டுக்கு 146 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் தலைவர் சச்சின் தெண்டுல்கர், அதிகபட்சமாக 48 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. சுரேஸ் ரைனா ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார்.

மூலம்[தொகு]