உள்ளடக்கத்துக்குச் செல்

2010 உலகக்கோப்பை கால்பந்து: இங்கிலாந்து, மெக்சிகோ அணிகள் இரண்டாம் சுற்றில் தோல்வி

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூன் 29, 2010

தென்னப்பிரிக்காவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து, மெக்சிக்கோ அணிகள் தோல்வியடைந்து வெளியேறியுள்ளன. ஜெர்மனி, மற்றும் அர்ஜென்டினா ஆகியன கால் இறுதி போட்டிக்கு முன்னேறின.


ஞாயிறன்று இடம்பெற்ற இரண்டாம் சுற்றுப் போட்டியில் ஜெர்மனி அணி இங்கிலாந்து அணியை 4-1 என்கிற கணக்கில் வென்று காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.


இந்தப் போட்டியில் ஜெர்மனி அணியின் ஆதிக்கம் தொடக்கம் முதலே இருந்தது. ஆட்டத்தின் இருபதாவது நிமிடத்தில் ஜெர்மனி கோல்கீப்பர் நோயர் பந்தை தனது பக்கத்திலிருந்து ஓங்கி உதைக்க அது மிக அதிக தூரம் பறந்து இங்கிலாந்து கோலை நோக்கி வந்தது. அந்த பந்தைப் பிடிக்க இங்கிலாந்து கோல்கீப்பர் ஜேம்ஸ் முன்னேறி வந்தபோது ஜெர்மன் வீரர் குளோஸ் முந்திப் பாய்ந்து வந்து பந்தை கோலுக்குள் இலாவகமாகத் தட்டிவிட்டு ஜெர்மனியின் முதல் கோலை 20 ஆம் நிமிடத்தில் போட்டார்.


தொடர்ந்து 32ஆவது நிமிடத்தில் முல்லர் கொடுத்த பந்தைப் பெற்ற புடோஸ்கி ஜெர்மனிக்கான இரண்டாவது கோலை அடித்தார்.


இடைவேளைக்கு முன்னர் இங்கிலாந்து அணி ஒரு கோல் போட 2-1 என்கிற நிலை ஏற்பட்டது. முதல் பாதி ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் பிராங்க் லேம்பர்டு அடித்த பந்து கோல்கம்பத்தில் மோதி எல்லைக் கோட்டை தாண்டி தரையில் குத்தியது. ஆனால் அதனை உருகுவே நாட்டு நடுவர் ஜார்ஜ் லோரியான்டோ நிராகரித்தார்.


எனினும் ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் ஜெர்மனி மேலும் இரண்டு கோல்களை அடிக்க இறுதியில் 4-1 என்கிற கணக்கில் ஜெர்மனி வென்றது.


ஞாயிறன்று நடந்த மற்றொரு போட்டியில், அர்ஜென்டினா அணி மெக்சிக்கோ அணியை 3 -1 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றது. ஜூலை 3 இல் இடம்பெறும் கால் இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா ஜெர்மனியை எதிர்த்து ஆடும்.

மூலம்

[தொகு]