உள்ளடக்கத்துக்குச் செல்

2010 கால்பந்து: ஸ்பெயின் ஜெர்மனியை வென்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூலை 8, 2010


நேற்றிரவு தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற 2010 உலகக்கோப்பை கால்பந்து இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி செருமனியை 1-0 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது. ஜூலை 11 இல் இடம்பெறும் இறுதிப் போட்டியில் அது நெதர்லாந்து அணியை எதிர்த்து ஆடவிருக்கிறது.


ஸ்பெயின் முதற் தடவையாக நேற்று உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியொன்றில் விளையாடியது. இதனால் அவர்களது ஆதரவாளர்களுக்கு பெருமளவு எதிர்பார்ப்பு இருந்தது.


நேற்றைய ஆட்டம் முழுக்க முழுக்க ஸ்பெயின் வீரர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. முதல் பாதி ஆட்டத்தில் பத்துக்கும் அதிகமான கோல் வாய்ப்புகளைத் தவறவிட்ட போதும், ஜெர்மனி வீரர்களுக்கு கோலடிக்க எந்த வாய்ப்பும் தரவில்லை. முற்பாதி ஆட்டம் கோல் எதுவும் போடப்படாமல் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் பாதி ஆட்டத்திலும் பல கோல் வாய்ப்புகளை ஸ்பெயின் வீரர்கள் தவறவிட்டனர். ஜெர்மனியின் ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பு அற்புதமாகப் பயன்படுத்தி, ஸ்பெயின் வீரர் பயோல் தலையால் முட்டி கோலடித்தார்.


இதன் பிறகு ஜெர்மனி வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். எனினும் கோலடிக்க வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.


இந்த வெற்றியை ஸ்பெயின் மக்கள் வீதிகளில் இறங்கிக் கொண்டாடினார்கள். வான வேடிக்கைகள், பாடல்கள், நடனம் மூலமும் அவர்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


நெதர்லாந்து, ஸ்பெயின் அணிகள் முன்னொருபோதும் உலகக்கோப்பையை வென்றதில்லை. அத்துடன், ஐரோப்பாவுக்கு வெளியே இடம்பெறும் ஒரு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இரண்டு ஐரோப்பிய அணிகள் மோதுவதும் இதுவே முதன் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூலம்

[தொகு]