2010 பொதுநலவாய போட்டிகள்: தங்கம் வென்ற நைஜீரியர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

திங்கள், அக்டோபர் 11, 2010

தில்லியில் நடைபெறும் பொதுநலவாயப் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டத்துக்கான பெண்கள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற நைஜீரியாவைச் சேர்ந்த ஒசாயெமி ஒசாயெமி ஊக்கமருந்து சோதனையில் தோற்றார்.


பொதுநலவாய விளையாட்டுக்களின் கூட்டமைப்பின் தலைவர் மைக் ஃபென்னெல் இத்தகவலைத் தெரிவித்தார். இது குறித்தான விசாரணைகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகும். மெத்தைல்ஹெக்சனீமைன் எனப்படும் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தின் சான்றுகள் இவரது உடம்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளஹு. இம்மருந்து அண்மையில் தான் தடை செய்யப்பட்ட மருந்தாக அறிவிக்கப்பட்டிருந்தது.


சென்ற வியாழனன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சாலி பியர்சன் தவறாக ஓட ஆரம்பித்ததை அடுத்து வெற்றி வாய்ப்பை இழந்தார். இதனையடுத்து இரண்டாவதாக வந்த 24 வயது நைஜீரியப் பெண் ஒசாயெமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.


இன்றைய சோதனையில் இம்முடிவு உறுதி செய்யப்பட்டால், இவரது தங்கப் பதக்கம் திரும்பப் பெறப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. "இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அவருக்குத் தாற்காலிக தடை மட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறது," என்று பதிலளித்தார் ஃபென்னெல்.


தில்லியில் நடைபெறும் போட்டிகளில் ஊக்கமருந்து சோதனையில் ஒருவர் வெற்றி பெறாதது இதுவே முதல் தடவையாகும்.


மூலம்

Bookmark-new.svg