2011 சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட சப்பானியப் படகு கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஞாயிறு, மார்ச் 25, 2012

2011 மார்ச் மாதத்தில் சப்பானில் இடம்பெற்ற ஆழிப்பேரலையில் அடித்துச் செல்லப்பட்ட மீன்பிடிப் படகு ஒன்று கனடாவின் மேற்குக் கரையில் மிதக்கக் காணப்பட்டுள்ளது. 15 மீட்டர் நீளமான இந்தப் படகை நேற்று முன்தினம் பிரித்தானியக் கொலம்பியாக் கடலில் ரோந்தில் ஈடுபட்டிருந்த விமானம் ஒன்று ஹைடா குவாய் தீவுகளில் இருந்து 275 கிமீ தூரத்தில் கண்டுபிடித்தது.


பசிபிக் பெருங்கடலைத் தாண்டிய பல மில்லியன் தொன்களுக்கும் அதிகமான சுனாமிக் கழிவுகளில் இது மிகப் பெரியது எனக் கருதப்படுகிறது. சப்பானின் ஹொக்கைடோவில் பதிவு செய்யப்பட்ட இக்கப்பலில் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை.


இப்படகில் கடல்மாசுக்கள் இருக்கலாம் என நம்பப்படுவதால் இது தற்போது கனடாவின் போக்குவரத்து அமைச்சினால் மிகவும் அவதானமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.


2011 மார்ச் 11 ஆம் நாள் ஏற்பட்ட நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலையால் 25 மில்லியன் தொன்களுக்கும் அதிகமான பொருட்கள் கழிவுகளாயின. 4 முதல் 8 மில்லியன் தொன்கள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டன. இவற்றில் 2 மில்லியன் தொன்கள் வரையில் இப்போதும் கடலில் மிதந்து வருகின்றன.


மூலம்[தொகு]