2012 ஆசியக் கிண்ணத்தை பாக்கித்தான் அணி வென்றது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மார்ச்சு 23, 2012

ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் பாக்கித்தான் அணி வங்காளதேச அணியை 2 ஓட்டங்களால் வெற்றி கொண்டு 11 வது ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியது.


சுற்றுப் போட்டிகளில் இந்திய, இலங்கை அணிகளைப் பின் தள்ளி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த வங்காளதேச அணி கிண்ணத்தை கைப்பற்ற பாக்கித்தானின் 237 ஓட்டங்கள் என்ற இலக்கை நெருங்கிய போதிலும் அது இரு ஓட்டங்களால் நழுவிப்போனது.


11வது ஆசியக் கிண்ணப் போட்டி வங்காளதேசத்தில் மேப்பூரில் உள்ள சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கத்தில் இடம்பெற்று வந்தது.


நேற்றைய இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேச அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது. 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் பாக்கித்தான் அணி 236 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு ஆடிய வங்காளதேச அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 234 ஓட்டங்களைப் பெற்றது.


ஆரம்ப வீரர்களாகக் களமிறங்கிய தமீம் இக்பால், நஜிமுடீன் இருவரும் இணைந்து முதலாவது விக்கெட்டுக்காக 68 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர். தமீம் இக்பால் 60 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தார். சகிப் அல் அசன் 68 ஓட்டங்கள் எடுத்தார்.


மூலம்[தொகு]