2012 இருபது20 உலகக்கோப்பையை மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றது
- 30 திசம்பர் 2018: ஆத்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வு துடுப்பாட்ட போட்டியில் இந்திய அணி வெற்றி
- 17 சனவரி 2018: வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன
- 15 திசம்பர் 2016: கத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது
- 29 நவம்பர் 2016: பிரேசிலின் கால்பந்தாட்ட குழு சென்ற வானூர்தி விபத்துக்கு உள்ளாகியதில் 75 பேர் பலி
- 18 சனவரி 2016: ஜல்லிக்கட்டு தடையால் களையிழந்த கிராமங்கள்
திங்கள், அக்டோபர் 8, 2012
இலங்கையில் நடைபெற்ற நான்காவது ஐசிசி உலக இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கை அணியை 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று உலககோப்பையை முதற்தடவையாகக் கைப்பற்றியது.
கொழும்பு ஆர். பிரேமதாச அரங்கில் நேற்று இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் துடுப்பாடத் தேர்ந்தது. முதல் 10 ஓவர்களில் 32 ஓட்டங்களை மட்டுமே அவ்வணி எடுக்கக்கூடியதாக இருந்தது. கிறிஸ் கெயில் 16 பந்துகளுக்கு 33 ஓட்டங்களையே எடுத்திருந்தார். ஆனாலும், பின்னர் விளையாடிய மார்லன் சாமுவேல்சு 56 பந்துகளை எதிர்கொண்டு 78 ஓட்டங்களைக் குவித்தார். இவற்றில் ஆறு எல்லைகளும் அடங்கும். இறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 6 இலக்குகளை இழந்து 137 ஓட்டங்களை 20 ஓவர்களில் எடுத்தது. அஜந்த மென்டிஸ் 4 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 4 இலக்குகளைக் கைப்பற்றினார்.
138 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடத் தொடங்கிய இலங்கை அணி இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் திலகரத்தின டில்சானை இழந்தது. குமார் சங்கக்கார, மகேல ஜெயவர்தன இணைந்து 42 ஓட்டங்களை எடுத்த போதிலும், சங்கக்கார ஆட்டமிழந்ததை அடுத்து தொடர்ச்சியாக இலக்குகள் விழத் தொடங்கின. இறுதியில் 18.4 ஓவர்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 101 ஓட்டங்களைப் பெற்று 36 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை அணி இறுதி ஆட்டம் ஒன்றில் தோல்வியடைவது இது நான்காவது தடவையாகும். 2007, 2011 களில் உலகக்கோப்பைக்கான இறுதிப் போட்டிகளில் முறையே ஆத்திரேலியா, மற்றும் இந்தியாவிடம் தோற்றது. 2009 இல் இருபது20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பாக்கித்தானிடம் தோற்றது.
போட்டியின் நாயகனாக மார்லன் சாமுவேல்சும், போட்டித் தொடரின் நாயகனாக ஆத்திரேலியாவின் ஷேன் வொட்சனும் தெரிவாயினர்.
இதற்கிடையில், இலங்கை அணித் தலைவர் மகேல ஜெயவர்தன இலங்கையின் இருபது20 அணிக்கான தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். நேற்றைய இறுதிப் போட்டிக்குப் பின்னரே மகேல இவ்வாறு அறிவித்தார்.
மூலம்
[தொகு]- World T20 cricket: West Indies beat Sri Lanka in final, பிபிசி, அக்டோபர் 7, 2012
- WI beat SL to win 2012 World T20 title, டெய்லிமிரர், அக்டோபர் 7, 2012