2013 இல் நாசாவின் புதிய விண்கலம் ஒராயன் வெள்ளோட்டத்துக்குத் தயாராகிறது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, அக்டோபர் 3, 2010


நாசாவின் விண்ணோடங்களுக்கான பிரதியீடாக, ஒராயன் விண்கலம், 2013 ஆம் ஆண்டில் புறப்படத் தயாராகுவதாக நாசா அறிவித்துள்ளது.


நாசாவின் புதிய விண்ணோடம் ஒராயன்.
படிமம்: நாசா.

ஒராயன் என்ற இவ்விண்கலத் திட்டம் ஆரம்பத்தில் நிலவுக்கு விண்வெளி வீரர்களை எடுத்துச் செல்வதற்காக ஆரம்பிகக்ப்பட்டது. ஆனால், ஐக்கிய அமெரிக்காவின் அரசுத் தலைவர் பராக் ஒபாமா தனது 2011 வரவு செலவுத் திட்ட உரையில் இத்திட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தார். பதிலாக சிறுகோள், பின்னர் செவ்வாய் கோளுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை முன்னெடுக்கும்படி நாசாவைக் கேட்டுக் கொண்டார்.


பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு "அவசரகால உதவிகளை” வழங்குவதற்கு விண்குமிழ்களைத் தயாரிக்கும் திட்டத்துக்கு பராக் ஒபாமா ஆதரவு தெரிவித்திருந்தார்.


விண்ணோடம் திட்டம் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து பல பணியாளர்கள், மற்றும் ஒப்பந்தக்காரர்களுக்கு வேலை இல்லாமல் போயிற்று. இதனால் விண்ணோடத் திட்டத்தில் மேலும் ஒரு பயணத்தைச் சேர்ப்பதற்கு அமெரிக்க காங்கிரசில் இப்போது விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.


ஒராயன் குறித்த எதிர்காலத் திட்டங்கள் கேள்விக்குறியாகவே உள்ளது. அந்நிலையில், அதனைத் தயாரித்து வரும் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் 2012 இன் இறுதியில் இவ்விண்கலம் இயக்குவதற்குத் தயார் நிலையில் என அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய விண்வெளித் திட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரலையும் அது தயாரித்துள்ளது.


ஆரம்பத் திட்டத்தின் படி, ஒராயன் விண்கலம் பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு 6 பயணிகளையும், நிலவுக்கு நால்வரையும் எடுத்துச் செல்வதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டது. இருந்த போதிலும், ஒபாமாவின் சிறுகோள் திட்டத்துக்கு ஒராயன் ஒரு முக்கிய பங்காற்றும் என அதன் தயாரிப்பாளர்கள் நம்புகின்றனர்.

தொடர்புள்ள செய்திகள்


மூலம்