46 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன அஞ்சல் பொதி இந்தியாவுக்குக் கிடைத்தது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், செப்டெம்பர் 4, 2012

1966 ஆம் ஆண்டில் ஏர் இந்தியா விமானம் ஒன்று மோதிய பிரெஞ்சு ஆல்ப்ஸ் பகுதியில் மோண்ட் பிளாங்க் மலைப்பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட அஞ்சல் பொதி ஒன்றை இந்தியா பெற்றுக் கொண்டது. பாரிசில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி சத்வந்த் கனாலியா இப்பொதியை பிரெஞ்சு அதிகாரிகளிடம் இருந்து நேற்றுப் பெற்றுக் கொண்டார்.


மோண்ட் பிளாங்கின் பனியாறு ஒன்றில் சுற்றுலாப் பயணிகள் சிலரால் ஆகத்து 21 ஆம் நாள் இப்பொதி கண்டுபிடிக்கப்பட்டு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இப்பொதியில் "தூதரகப் பொதி" என்றும் "வெளிவிவகார அமைச்சு" என்றும் பொறிக்கப்பட்டிருந்தது.


இப்பொதியில் மிக முக்கிய வரலாற்று ஆவணங்கள் அடங்கியுள்ளதாக தூதரக அதிகாரி தெரிவித்தார்.


மும்பையில் இருந்து நியூயோர்க் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் 1966 சனவரி 24 இல் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் வீழ்ந்து நொறுங்கியது. இவ்விமானத்தில் பயணம் செய்த 17 பேரும் உயிரிழந்தனர். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களில் இந்திய அணு ஆற்றல் திட்டத்தில் முக்கியப் பங்களித்த அணுக்கரு இயற்பியலாளர் ஓமி பாபாவும் அடங்குவார்.


2008 செப்டம்பரில் இப்பகுதியில் சனவரி 23, 1966 தேதியிடப்பட்ட இந்தியப் புதினப்பத்திரிகைகள் சிலவற்றை டேனியல் ரோச் என்பவர் கண்டெடுத்தார். 1950 ஆம் ஆண்டிலும் இதே பகுதியில் இந்திய விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியது.


மூலம்[தொகு]