உள்ளடக்கத்துக்குச் செல்

7.0 அளவு நிலநடுக்கம் நியூசிலாந்தைத் தாக்கியது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செப்டம்பர் 4, 2010

நியூசிலாந்தின் தெற்குத் தீவில் 7.0 அளவு நிலநடுக்கம் இன்று சனிக்கிழமை அதிகாலை தாக்கியதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.


இன்றைய நிலநடுக்கத்தின் மையம்
தெற்குத் தீவு

நியூசிலாந்தின் இரண்டாவது பெரிய நகரமான கிறைஸ்ட்சேர்ச்சின் தென்மேற்கே 55 கிமீ தொலைவில் 12 கிமீ ஆழத்தில் இது மையம் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடங்கள், சாலைகள் போன்றவை பெரும் சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பல இடங்களில் மின்துண்டிப்பும் நிகழ்ந்துள்ளது. குறைந்தது இருவர் படுகாயமடைந்துள்ளனர்.


கிறைஸ்ட்சேர்ச் நகரில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நகரில் 386,000 பேர் வாழ்கின்றனர்.


இன்றைய நிலநடுக்கம் சனிக்கிழமை அதிகால உள்ளூர் நேரம் 0435 மணிக்கு (1635 GMT வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. அதிகமானோர் தூக்கத்தில் ஆழ்ந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


40 செக்கன்களுக்கு இந்நிலநடுக்கம் உணரப்பட்டதாக நியூசிலாந்து வானொலி அறிவித்தது. மேலும் 5.7 அளவில் பின்தாக்கங்கம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது. தெற்குத் தீவின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய நிலநடுக்கம் உணரப்பட்டதாக உள்ளூர்ப் பத்திரிகை தெ பிரஸ் அறிவித்துள்ளது. பழைய கட்டிடங்களின் சுவர்கள் பல இடிந்து வீழ்ந்துள்ளன. சாலைகள் பல மூடப்பட்டுள்ளன. கிறைஸ்ட்சேர்ச் பன்னாட்டு விமானநிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகப் அதன் பேச்சாளர் தெரிவித்தார்.


நியூசிலாந்தில் ஓராண்டுக்கு 14,000 நிலநடுக்கங்கள் சராசரியாகப் பதியப்படுகின்றன. இவற்றில் கிட்டத்தட்ட 20 நிலநடுக்கங்களின் அளவு 5.0 இற்கும் அதிகமானவை.


கடைசியாக 1968 ஆம் ஆண்டில் மிகப்பெரும் நிலநடுக்கம் நியூசிலாந்தில் ஏற்பட்டது. 7.1 ரிக்டர் அளவில் தெற்குத் தீவைத் தாக்கியதில் மூவர் கொல்லப்பட்டனர்.

மூலம்