உள்ளடக்கத்துக்குச் செல்

ஒரிசாவில் மாவோயிசப் போராளிகளின் தாக்குதலில் 10 காவல்துறையினர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஏப்பிரல் 5, 2010

இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் மாவோயிசப் போராளிகள் புதைத்து வைத்த கண்ணி வெடியில் பேருந்து ஒன்று சிக்கியதில் குறைந்தது பத்து காவல்துறையினர் கொல்லப்பட்டனர். மேலும் 10 பேர் காயமுற்றனர்.


இந்தியாவின் கிழக்குக் கரையில் ஒரிசா மாநிலத்தில் கொராப்பூட் மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இத்தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இருபதுக்கும் அதிகமான காவல்துறையினர் மூன்று வாகனங்களில் சென்றுகொண்டிருந்தபோது அதில் ஒரு வாகனம் கண்ணி வெடியில் சிக்கி பேருந்து சிதறுண்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.


அண்மையில் தீவிரவாதிகளுக்கு எதிராக பல மாநிலங்களில் அரசு தாக்குதல்களைத் தொடுத்திருந்தது.


ஏறத்தாழ 50,000 நடுவண் அரசின் துணை-இராணுவத்தினரும், அதே அளவு காவல்துறையினரும் உலங்கு வானூர்திகள் மற்றும் ஆளற்ற தேடுதல் வானூர்திகள் சகிதம் இந்நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.


மேற்கு வங்காளத்தில் இராணுவ நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக அங்கு உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் சென்றிருந்தார். ”தீவிரவாதிகள் மிகவும் பலவீனமடைந்துள்ளார்கள்”, என்று தெரிவித்துள்ள சிதம்பரம், அவர்களைக் “கோழைகள்” என வர்ணித்தார்.


"காடுகளுக்குள் ஏன் அவர்கள் பதுங்கி இருக்கிறார்கள்? வன்முறைகளைக் கைவிட்டு பேச்சுவார்த்தைகளுக்கு வரும்படி அவர்களைக் கோரியிருந்தோம்." என்றார் அவர் செய்தியாளர்களிடம்.

மூலம்

[தொகு]