உள்ளடக்கத்துக்குச் செல்

கருநாடகத்தில் பேருந்து விபத்து: 30 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மே 31, 2010


தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 10 குழந்தைகள் உட்பட 30 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


குல்பர்கா மாவட்டத்தில் இருந்து பெங்களூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சித்ரதுர்கா மாவட்டத்தில் சென்றுகொண்டிருக்கையில் சாலையோரத்தில் உள்ள ஒரு பள்ளத்தில் விழுந்து, தலைகீழாகக் கவிழ்ந்ததில், அதன் எண்ணெய்த் தாங்கி வெடித்ததில் பேருந்தில் பயணித்த 64 பேரில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். 28 பேர் காயமடைந்தனர்.


இறந்தவர்களில் 15 பேர் பெண்கள் என்றும் 10 பேர் குழந்தைகள் என்றும் தெரிகிறது. காயமடைந்தவர்களில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.


விபத்து குறித்து வடகிழக்கு கர்நாடகப் பகுதி அரசு போக்குவரத்து மேலாண் இயக்குனர் சங்கர் பாடீல் கூறியது: "எதிரே வந்த சுமையுந்து மீது மோதாமலிருக்க சாரதி பேருந்தைத் திருப்பியபோது அது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி உருண்டுள்ளது".


இறந்தவர்கள் சுராப்புராவைச் சேர்ந்த ஏழை கூலித் தொழிலாளிகள் மற்றும் அவர்களின் குழந்தைகள் ஆவர். அவர்கள் வேலை தேடி பெங்களூருக்கு வந்துகொண்டு இருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. குல்பர்காவில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் திடீரென நிறுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட அவர்கள் பெங்களூருக்கு புறப்பட்டதாக கூறப்படுகிறது.


ஓட்டுநரின் கவனக் குறைவே இந்த விபத்தின் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.


சென்ற வாரம் கருநாடகத்தின் மங்களூரில் விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று தீப்பற்றி எரிந்ததில் நூற்று ஐம்பதுக்கும் அதிகமானோர் உடல் கருகி இறந்தனர்.

மூலம்

[தொகு]