உள்ளடக்கத்துக்குச் செல்

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் போப்பாண்டவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், பெப்பிரவரி 12, 2013

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் இம்மாத இறுதியில் தனது திருத்தந்தை பதவியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்துள்ளார்.


திருத்தந்தை 16ம் பெனடிக்

திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் 2005 ஆம் ஆண்டில் இறந்ததை அடுத்து செருமனியில் பிறந்த கருதினால் யோசப் ரட்சிங்கர் பதினாறாம் பெனடிக்ட் என்ற பெயரில் 265வது திருத்தந்தை ஆனார். கடந்த எட்டு ஆண்டுகளாகத் திருத்தந்தையாகப் பதவியில் இருக்கும் 85 வயதான திருத்தந்தை பெனடிக்ட் கத்தோலிக்கத் திருச்சபைக்குத் தலைமை வகிப்பதற்கு இந்த வயது மிக அதிகம் எனக் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.


முதுமை காரணமாக திருத்தந்தைக்குரிய பணிகளைச் சரியாக ஏற்று நடத்த முடியாத நிலையில் இம்முடிவைத் தான் எடுத்துள்ளதாகக் கூறியுள்ள திருத்தந்தை, 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் நாள் கர்தினால்கள் அவையால் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட இப்பொறுப்பிலிருந்து இம்மாதம் 28ம் நாள் உரோமை நேரம் இரவு 8 மணியிலிருந்து பணி ஓய்வு பெறுவதாக திருத்தந்தை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.


இவ்வாண்டு ஈஸ்டர் விழாவிற்கு முன்னர் புதிய போப்பாண்டவர் தெரிவு செய்யப்படுவார் என வத்திக்கான் அறிவித்துள்ளது.


கிட்டத்தட்ட 600 ஆண்டுகளுக்குப் பின்னர் முதற்தடவையாக போப்பாண்டவர் ஒருவர் பதவி விலகுவது வத்திக்கான், மற்றும் உலகத் தலைவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக 1415 ஆம் ஆண்டு திருத்தந்தை பன்னிரண்டாம் கிரெகரி கத்தோலிக்கத் திருச்சபையில் சமயப்பிளவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து பதவியில் இருந்து விலகினார்.


வெளிநாட்டுப் பயணங்கள் எதையும் இனி மேற்கொள்ள வேண்டாம் என திருத்தந்தையின் மருத்துவர் அவருக்கு அண்மையில் அறிவுறுத்தியிருந்ததாக அவரின் உடன்பிறந்தவரான கியார்க் ரட்சிங்கர் செய்தியாளரிடம் தெரிவித்தார். இதனால் பதவியில் இருந்து விலகுவதற்கு சில காலத்திற்கு முன்னதாகவே முடிவு செய்திருந்ததாக அவர் தெரிவித்தார். "அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் விடயத்தில் அவர் தலையிடமாட்டார்," என கியார்க் ரட்சிங்கர் கூறினார்.


ஐரோப்பியர் ஒருவரே அடுத்த திருத்தந்தையாக தெரிவு செய்யப்படும் வாய்ப்புகள் அதிகம் என அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். தற்போதைய மிலான் பேராயர் அஞ்செலோ ஸ்கோலா, பெனடிக்டின் முன்னாள் மாணவர் ஆஸ்திரியரான கிறிஸ்தோப் ஸ்கோன்புரொன் ஆகியோரின் பெயர்கள் பத்திரிகைகளில் தெரிவிக்கப்படுகின்றன. மேலும், கானா நாட்டின் கருதினார் பீட்டர் டர்க்சன், நைஜீரிய கருதினால் பிரான்சிசு அரின்சே ஆகியோருக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இம்மாதம் 28ம் தேதி ஓய்வு பெறும் திருத்தந்தை, அதன்பின் திருத்தந்தையர்களின் காஸ்தெல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்லத்தில் சிறிது காலம் தங்கியிருப்பார் எனவும், அதன் பின்னர் வத்திக்கானுக்கு உள்ளேயுள்ள அடைபட்ட கன்னியர் மடத்தில் செபம் மற்றும் தியானத்தில் தன் வாழ்வைச் செலவிடுவார் எனவும் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.


பதினாறாம் பெனடிக்ட் பொதுவாக கொஞ்சம் பழைமைவாதியாகப் பார்க்கப்படுகிறார். கருத்தடை விவகாரத்தில், உயிருக்கு ஒரு புனிதத்துவம் இருக்கிறது, அதனைக் கெடுக்கக்கூடாது என்று தார்மீக துல்லியத்தை வலியுறுத்தியிருந்தார். தனது பதவிக்காலத்தில், கத்தோலிக்க திருச்சபையை ஆக்கிரமித்திருந்த சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை இவர் எதிர்கொண்டார்.


மூலம்

[தொகு]