உள்ளடக்கத்துக்குச் செல்

போப்பாண்டவர் 16ஆம் பெனடிக்டின் ஐக்கிய இராச்சியப் பயணம் சிறப்பாக நிறைவுற்றது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், செப்டெம்பர் 20, 2010

திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் மேற்கொண்ட ஐக்கிய இராச்சியப் பயணம் மிகச் சிறப்பாக நிகழ்ந்தது என்றும், அது குறித்து அவர் பெருமகிழ்ச்சி தெரிவித்தார் என்றும் வத்திக்கான் செய்திகள் கூறுகின்றன. செப்டம்பர் 16இலிருந்து 19 வரை நான்கு நாட்கள் போப்பாண்டவர் ஐக்கிய இராச்சியத்தில் பயணம் மேற்கொண்டு பல பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பிரித்தானிய அரசி எலிசபெத்து போப்பாண்டவரை எடின்பரோவில் வரவேற்றார். கத்தோலிக்க கிறித்தவ சபையின் உலகத் தலைவராக விளங்கும் போப்பாண்டவர் ஐக்கிய இராச்சியத்தில் பெரும்பான்மையாய் உள்ள ஆங்கிலிக்க சபையோடு நல்லுறவு ஏற்படுத்துவது தமது பயணத்தின் ஒரு முக்கிய குறிக்கோள் என்று குறிப்பிட்டார். ஆங்கிலிக்க சபைத் தலைவராகிய ரோவன் வில்லியம்சு என்பவரின் இல்லத்திற்குச் சென்று போப்பாண்டவர் அவரோடு பேச்சு நடத்தினார்.


திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்

ஐக்கிய இராச்சிய பாராளுமன்றக் கீழவைக்குச் சென்று போப்பாண்டவர் ஆற்றிய உரையில், "மனித சமுதாயத்தில் கடவுள் நம்பிக்கை மறைந்துவிடாமல் காப்பதும், மத நம்பிக்கையைப் பகுத்தறிவோடு ஆய்ந்து தெளிவுபெறுவதும் தேவை" என்றுரைத்தார்.


ஐக்கிய இராச்சியத்தில் கிறித்தவம் தவிர வேறு பல சமயங்களைச் சார்ந்தவர்களும் வாழ்கின்றார்கள் என்பதை ஏற்று, போப்பாண்டவர் பல்சமய நல்லிணக்கக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு, உலகில் சமாதானத்தையும் மக்களிடையே நல்லுறவையும் வளர்ப்பதில் மதங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மதத்தின் பெயரால் வன்முறையைத் தூண்டுவது ஏற்கத்தகாதது என்றும் அவர் அழுத்தமாகக் கூறினார்.

கர்தினால் ஜான் ஹென்றி நியூமன்

போப்பாண்டவர் தம் பயணத்தின் இறுதிநாளில் கத்தோலிக்க சமயத்திற்கு முக்கியமான ஒரு நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். அதுவே கர்தினால் ஜான் ஹென்றி நியூமன் (1801-1890) என்பவருக்கு "அருளாளர்" (முத்திப் பேறு பெற்றவர்) என்னும் பட்டமளிப்பு வழங்கிய நிகழ்ச்சி ஆகும். கத்தோலிக்க திருச்சபை வழக்கப்படி, கடவுள் பக்தியிலும் பிறருக்கு சேவை செய்வதிலும் சிறந்து விளங்கி இறந்தவர்கள் தம் சாவுக்குப் பின்னும் கடவுளோடு நல்லுறவில் இணைந்து, முத்திப் பேறு அடைந்து மகிழ்கின்றார்கள். இதை உலகறிய அறிக்கையிட்டு, அவர்களை மக்களுக்கு முன்மாதிரியாக முன்னிறுத்துகின்ற செயலே "முத்திப் பேறு" (அருளாளர்) பட்டம் என்று அழைக்கப்படுகிறது.


கர்தினால் நியூமனுக்கு இப்பட்டம் வழங்கியது ஒரு முக்கிய நிகழ்வு ஆகும். இலண்டனில் பிறந்த நியூமன் ஆங்கிலிக்க சபையில் உறுப்பினராக வாழ்ந்து, அச்சபையில் குருவானார். புகழ்மிக்க ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் பயின்றார். கிறித்தவ சமயக் கொள்கைகளை விளக்கி பல நூல்கள் வெளியிட்டார். நியூமன் தம் நாற்பத்து நான்காம் வயதில் (அக்டோபர் 9, 1845) கத்தோலிக்க சபைக்கு மாறி வந்தார். போப்பாண்டவர் 13ஆம் லியோ நியூமனுக்குக் கர்தினால் பட்டம் வழங்கிச் சிறப்பித்தார் (1879). அப்போது நியூமனுக்கு வயது 78.


லண்டனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று

நியூமன் எழுதிய "தன்வரலாறு" (Apologia pro Vita Sua), "பல்கலைக் கழகத்தின் இயல்பு" (Idea of a University), "சமய நம்பிக்கையின் பகுத்தறிவு அடிப்படை" (An Essay in Aid of a Grammar of Assent), "செரோந்தியுசின் கனவு" (The Dream of Gerontius) முதலியவை புகழ்பெற்றவை. மேலும் "அருள்நிறை சோதியே, இருளில் வழிகாட்டாய்" (Lead kindly light amid the encircling gloom) எனத்தொடங்கும் பாடலை இயற்றியவரும், ஆங்கில மொழி நடையில் தலைசிறந்தவர் என்று அறியப்படுபவரும் நியூமன் ஆவார்.

எதிர்ப்பும் ஆதரவும்

பெனடிக்டின் ஐக்கிய இராச்சிய பயணத்தின்போது சில எதிர்ப்பு ஊர்வலங்கள் நடந்தன. ஆயினும் அவரைக் காணவும், அவருடைய உரைகளைக் கேட்கவும் பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருத்தந்தை ஒருவரின் ஐக்கிய இராச்சியத்துக்கான முதலாவது அரசு முறைப் பயணம் இதுவாகும்.

தொடர்புடைய செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]