உள்ளடக்கத்துக்குச் செல்

மிகப்பழமையான மாயன் ஓவியங்கள், நாட்காட்டிகள் கண்டுபிடிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மே 11, 2012

நடு அமெரிக்காவின் குவாத்தமாலாவில் சுல்த்துன் சிதையலில் பணி புரியும் தொல்லியலாளர்கள் மாயன் காலத்து வானியல் நாட்காட்டிகள் உட்படப் பல ஓவியங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.


கிபி 9ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ள இந்தத் தொல்லியல் பொருட்கள் குறித்த தகவல்கள் சயன்சு ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன. இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட மாயன் நாகரிகத்தைச் சேர்ந்த தொல்பொருட்களில் இவையே மிகப் பழமையானவையாகும்.


2012 ஆம் ஆண்டில் உலகம் முடிவுக்கு வரும் என்பதை இந்த நாட்காட்டிகள் குறித்து வைத்திருந்ததாக சர்ச்சைகள் கிளம்பியிருந்தமையால் மாயன் நாகரிகம் குறித்து அண்மைக்காலத்தில் அதிகளவு பேசப்பட்டு வருகிறது.


கிமு 2000 ஆம் ஆண்டுகளில் இருந்து நடு அமெரிக்காவில் ஆதிக்கத்தில் இருந்த மாயன் நாகரிகம் 15ம் நூற்றாண்டளவில் எசுப்பானியர்களின் குடியேற்றத்தை அடுத்து வீழ்ச்சி அடையத் தொடங்கியது.


சுல்த்துன் என்ற இடத்தில் உள்ள சிதையல்கள் 1912 ஆம் ஆண்டில் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் 30 சதுர கிமீ சுற்றளவில் இன்னும் பல இடங்கள் அகழ்வாயப்படாமல் உள்ளன.


இங்கு கண்டுபிடிக்கப்பட்டவற்றில் 2.5 மில்லியன் நாட்கள் வரையான வானியல் காலக்கோடு மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. அதாவது இன்னும் 7,000 ஆண்டுகள் வரையில் நாட்காட்டிகள் கணக்கிடப்பட்டுள்ளன என இவ்வாய்வுக்குத் தலைமை தாங்கிய பொஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர் வில்லியம் சட்டர்னோ தெரிவித்தார். "உலகம் இன்னும் 7,000 ஆண்டுகள் இப்போதுள்ளது போலவே தொடர்ந்திருக்கும் என பண்டைய மாயர்கள் கருதினார்கள்," என அவர் கூறினார்.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]