இலங்கையின் காவல்துறை அதிபர் மகிந்த பாலசூரிய பதவி விலகினார்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூன் 2, 2011

இலங்கையின் காவல்துறைத் தலைவர் மகிந்த பாலசூரிய தமது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை தலைநகர் கொழும்புக்கு வெளியே இருக்கும் கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலையத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 250 பேர் காயமடைந்த நிலையில், நாட்டின் தலைமை காவல்துறை அதிகாரியான மகிந்த பாலசூரிய தான் ஓய்வு பெறும் காலத்துக்கு முன்னரே விருப்ப ஓய்வில் செல்ல அனுமதி கோரியுள்ளார்.


தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்தின் போது, காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியது குறித்து பரந்துபட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன. இச்சம்பவத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததார். இந்த நிலையில் அவர் தமது பதவி விலகல் கடிதத்தை பாதுகாப்பு அமைச்சிடம் வழங்கியுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது. இதேவேளை மகிந்த பாலசூரியவின் பதவிக்கு அவரது சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஆர்ப்பாட்டங்களில் காவல்துறையினரை அதிகளவில் ஈடுபடுத்த வேண்டாம் எனப் பாதுகாப்பு செயலாளர் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்ததாகவும் எனினும் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவையும் மீறி காவல்துரையினர் இந்த ஆர்ப்பாட்டத்தின் மீது அதிகார மீறலில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவை மீறி செயற்ப்பட்டமையினால் இந்தக் கலகம் தொடர்பில் பொறுப்பேற்ற முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த மோதலில் 15 காவல்துறை அதிகாரிகள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர் என்று அரசு கூறுகிறது.

மூலம்[தொகு]