உள்ளடக்கத்துக்குச் செல்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் தெரிவு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், திசம்பர் 20, 2011

இலங்கையின் முக்கிய எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


ரணில் விக்கிரமசிங்க

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், பிரதித் தலைவர், தேசிய அமைப்பாளர் ஆகிய மூன்று முக்கிய பதவிகளுக்கும் நேற்று திங்கட்கிழமை நண்பகல் இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்ற போதே கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் தெரிவாகியுள்ளார். தலைவர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய ஆகியோர் போட்டியிட்டனர். ரணில் விக்கிரமசிங்கவுக்கு 72 வாக்குகளும், கரு ஜயசூரியவுக்கு 24 வாக்குகளும் கிடைத்தன.


கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் ரவி கருணாநாயக்காவை 8 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். தேசிய அமைப்பாளராக கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் தயா கமகே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இந்த இரகசிய வாக்கெடுப்பு கொழும்பில் உள்ள ஐ.தே.க.வின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது. இவ்வாக்கெடுப்பில் ஐ.தே.க.வின் செயற்குழு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவைச் சேர்ந்த 96 பேர் வாக்களித்தனர்.


இரகசிய வாக்கெடுப்பு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து ரணிலின் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரங்களில் ஈடுபட்டனர். அதேநேரம், கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரின் ஆதரவாளர்கள் வன்முறைகளில் ஈடுபடத் தொடங்கினர். கற்களையும், தடிகளையும், சிறிகொத்தா அலுவலகத்தை நோக்கி வீசினர். இதனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்ததுடன், சிறிகொத்தா அலுவலகமும் சேதமுற்றது.


கட்சித் தலைமைப் பதவியிலிருந்து எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவை வெளியேற்றுவதற்கு சஜித் பிரேமதாச எம்.பியின் அணியினர் கடந்த சில மாதங்களாக முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். அந்தடிப்படையில் கட்சி யாப்பின் பிரகாரம் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.


மூலம்

[தொகு]