உள்ளடக்கத்துக்குச் செல்

ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக அதிருப்தியாளர்கள் போராட்டம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஆகத்து 18, 2011

இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சித் (ஐதேக) தலைமைப் பொறுப்பிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை வெளியேறக் கோரி ஐதேக பிரதித்தலைவர்களுள் ஒருவரான சஜித் பிரேமதாச தலைமையிலான பிரிவினர் நேற்று கொழும்பு விகாரமாதேவி பூங்கா அருகாமையில் பெரும் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தினர்.


ரணில் விக்கிரமசிங்க

இப்பேரணியில் இதில் சஜித் பிரேமதாச, தயாசிறி ஜயசேகர, ரோசி சேனாநாயக்க, ரஞ்சித் மத்துமபண்டார, தலதா அத்துகோரல, சுஜீவ சேரசிங்க, புத்திக பத்திரண உள்ளிட்ட பல ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர். தொடர்ச்சியாக பல தேர்தல்களில் தோல்வியடைந்து வரும் ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலக வேண்டுமென இவர்கள் குரலெழுப்பினர்.


ரணில் விக்கிரமசிங்கவை கட்சித் தலைமையிலிருந்து நீக்கிவிட்டு, அதன் பிரதித் தலைவரான கரு ஜயசூரியவை தலைவராக நியமிக்க வேண்டுமென சஜித் பிரேமதாச தலைமையிலான பிரிவினர் முயற்சித்து வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதான உரைகளை சஜித் பிரேமதாச, ரஞ்சித் மத்துமபண்டார, தயாசிறி ஜெயசேகர ஆகியோர் நிகழ்த்தினர். அங்குரையாற்றிய சஜித் பிரேமதாச, பதினேழு வருடங்களாக படுதோல்வியை எதிர்நோக்கியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியை கட்டியெழுப்புவது ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமல்ல என்றும், அவருக்கு கட்சியின் தலைமை பதவியில் வீற்றிருக்கும் சுயநலநோக்கம் மாத்திரமே இருக்கிறது என்றும் கண்டனம் தெரிவித்தார். ரணிலுக்கு உண்மை நிலையை எடுத்துரைக்கும் எண்ணத்துடன் தாங்கள் சத்தியாக்கிரகம் போன்ற சாத்வீகப் போராட்டங்களை நடத்துவதாக சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார். ரணில் எதிர்பார்ப்பதைப் போன்று நான் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு ஓடிவிடமாட்டேன் என்று அறிவித்த சஜித் பிரேமதாச உயிருள்ளவரை கட்சியின் நம்பிக்கைக்குரிய சேவகனாக இருப்பேன் என்று சொன்னார்.


இதேவேளை, நேற்றுப் பிற்பகல் கட்சியின் செயற்குழு அதன் தலைமைப்பீடமான சிறீகொத்தாவில் கூடியது. இதில் 54 பேர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தலைமைத்துவ மாற்றம் தொடர்பில் எதுவித தீர்மாணங்களும் எடுக்கப்படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை வெளியேற்ற எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.


செயற்குழு தீர்மானம் எடுப்பதற்கு முன்னதாக சஜித் குழுவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். என்றாலும், கட்சித் தலைமையகம் முன்னால் ஆர்ப்பாட்ட எதுவும் நடத்தக் கூடாதென கங்கொடவில் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து, தங்களது போராட்டத்தை சஜித் பிரேமதாச அணியினர் கொழும்பு, விகார மகாதேவி பூங்கா அருகில் நடத்தினர்.


ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள அக்கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியை பகிரங்கமாக கடுமையாக விமர்சித்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. எனினும் கட்சியில் சீர்திருத்தத்தை வலியுறுத்தும் ஐதேகவின் வேறு பல அங்கத்தவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்கான பிரேரணையை அக்கட்சியின் செயற்குழு நிராகரித்தது.


மூலம்

[தொகு]