உள்ளடக்கத்துக்குச் செல்

மங்களூர் ஏர் இந்தியா விபத்துக்கு தூக்கக்கலக்கத்தில் இருந்த விமான ஓட்டியே காரணம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், நவம்பர் 17, 2010

இந்தியாவின் தெற்கு நகரான மங்களூரில் கடந்த மே மாதத்தில் இடம்பெற்ற விமான விபத்துக்கு தூக்கக்கலக்கத்தில் இருந்த விமான ஓட்டியே காரணம் என அதிகாரபூர்வ விசாரணை முடிவுகள் தெரிவிக்கின்றன.


விபத்திற்குள்ளான விமானத்தை ஒத்த ஏர் இந்தியாவின போயிங் விமானம்

சேர்பியாவைச் சேர்ந்த விமான ஓட்டி சிலாத்கோ குளூசிக்கா பயணத்தின் அநேகமான நேரத்தில் தூக்கக்கலக்கத்தில் இருந்ததாகவும், விமானம் கீழிறங்கும் போது அவர் "தன்னிலை இழந்திருந்ததாகவும்” விசாரணை முடிவுகள் தெரிவிக்கின்றன. விமானம் மங்களூர் ஓடுபாதையை தவறான உயரத்திலும் கோணத்திலும் அணுகியுள்ளது. மீண்டும் ஒரு தடவை விமான நிலையத்தைச் சுற்றி வரும்படி சக விமான ஓட்டி எடுத்துக் கூறியும் அவர் அதனைக் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.


விமானம் தீப்பிடிப்பதற்கு சில செக்கன்களுக்கு முன்னர் சக விமான ஓட்டி “ஓடுபாதை அனைத்தும் எமக்கு முடிந்து விட்டது” எனக் கத்தியது விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட பதிவுகளில் இருந்து கேட்கப்பட்டது.


இவ்விமான விபத்து குறித்த முழு அறிக்கையும் நேற்று செவ்வாய்க்கிழமை அன்று அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.


10 ஆண்டுகளில் இந்தியாவில் இடம்பெற்ற மிக மோசமான விமான விபத்து இதுவாகும். துபாயில் இருந்து மங்களூர் நோக்கி வந்த போயிங் 737 ரக ஏர் இந்தியா எக்சுபிரசு 812 விமானத்தில் 21 குழந்தைகள் உட்பட 160 பயணிகளும் 6 சிப்பந்திகளும் இருந்தனர். எட்டு பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டனர். இவ்விமானத்தில் பயணம் செய்தோரில் பெரும்பாலானோர் இந்தியர்கள். இவர்கள் மத்திய கிழக்கில் பணியாற்றிவிட்டு குடும்பத்தினருடன் திரும்பியவர்கள் ஆவர்.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]