எயிட்டியின் முன்னாள் அரசுத்தலைவர் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்பினார்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சனவரி 17, 2011

நாடு கடந்த நிலையில் கடந்த 25 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த எயிட்டியின் முன்னாள் அரசுத்தலைவர் ஜீன் குளோட் டுவாலியர் நாட்டில் அண்மையில் இடம்பெற்ற பொதுத்தேர்தலை அடுத்துக் கிளம்பியுள்ள அரசியல் கொந்தளிப்புகளுக்கு மத்தியில் இன்று நாடு திரும்பியுள்ளார்.


கடந்த 25 ஆண்டுகாலமாக பிரான்ஸ் மற்றும் பல நாடுகளில் வசித்து வந்த டுவாலியர், "உதவி செய்வதற்காகவே வந்துள்ளதாகத்” தெரிவித்தார்.


ஓராண்டுக்கு முன்னர் எயிட்டியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தமையே தாம் இங்கு வருவதற்கு தூண்டுகோலாய் அமைந்ததாக டுவாலியரின் துணைவி வெரோனிக் ரோய் தெரிவித்தார்.


விமானநிலையத்தில் அவரது முன்னாள் ஆதரவாளர்கள் பலர் அவர்களை வரவேற்றனர்.


டுவாலியரது 15 ஆண்டுகால ஆட்சியில் அவரும் அவரது குடும்பத்தினரும் ஊழல், மற்றும் பணமோசடி செய்ததாகக் குற்றம் சாட்டி இடம்பெற்ற மக்கள் போராட்டத்தை அடுத்து அவர் ஆட்சியில் இருந்து கலைக்கப்பட்டார்.


கடந்த நவம்பர் 28 ஆம் நாள் இடம்பெற்ற தேர்தல்களில் ஆளும் கட்சியினரால் மோசடி இடம்பெற்றதாக நாட்டில் பெரும் அரசியல் கொந்தளிப்பு இடம்பெற்று வருகிறது. மக்கள் கிளர்ச்சிகளில் பலர் கொல்லப்பட்டனர். தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்ட அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஒசே இன்சல்சா திங்கள் அன்று தனது அறிக்கையைக் சமர்ப்பிப்பதற்காக எயிட்டிக்குப் பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் டுவாலியரது வருகை இடம்பெற்றுள்ளது.


தனது ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட தவறுகளுக்காக டுவாலிய 2007 ஆம் ஆண்டில் எயிட்டிய மக்களிடம் மன்னிப்புக் கேட்டிருந்தார்.


மூலம்[தொகு]