உள்ளடக்கத்துக்குச் செல்

1972 ”இரத்த ஞாயிறு” படுகொலைகள் தொடர்பில் பிரித்தானியப் பிரதமர் மன்னிப்புக் கேட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூன் 17, 2010

வடக்கு அயர்லாந்தில் 38 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற ”இரத்த ஞாயிறு” என அழைக்கப்பட்ட படுகொலை நிகழ்வு தொடர்பில் ஐக்கிய இராச்சியப் பிரதமர் டேவிட் கேமரன் மன்னிப்புக் கோரியுள்ளார். இப்படுகொலை அநீதியானதும் எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாததுமென கேமரன் தெரிவித்துள்ளார்.


படிமம்:Murder victims of Bloody Sunday.jpg
இரத்த ஞாயிறன்று கொல்லப்பட்டவர்களின் நினைவுச் சுவரொட்டி
அயர்லாந்தின் டெரி நகரில் உள்ள நினைவுச் சின்னம்

1972 ஜனவரி 30 இல் வட அயர்லாந்தின் லண்டன்டெரி நகரில் மனித உரிமைக் குழுக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது பிரித்தானியத் துணைப்படைகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 13 பேர் கொல்லப்பட்டதுடன் 14 பேர் காயமடைந்தனர். இந்நிகழ்வு குறித்தான விசாரணை 12 ஆண்டுகளாக நடைபெற்று அதன் அறிக்கை இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கை இராணுவத்தினரின் செயலைக் கடுமையாகக் கண்டித்திருப்பதுடன் இராணுவத்தினரே முதலில் தாக்குதலை ஆரம்பித்ததாகக் குறிப்பிட்டுள்ளது.


இது குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள கேமரன் இவ்விசாரணை அறிக்கையிலுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.


வட அயர்லாந்தின் மிகுந்த சர்ச்சைக்குரிய நாளாகக் கருதப்படும் இந்நாளில் இடம்பெற்ற படுகொலை குறித்த விசாரணை அறிக்கை எவ்வித சந்தேகங்களுமின்றி இராணுவத்தினர் மீது குற்றஞ்சாட்டுவதற்கான ஆதாரங்களைக் கொண்டிருப்பதாக கேமரன் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய போதே இவ்விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை கேனரன் வெளியிட்டுள்ளார்.


துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலுக்குப் பதிலாக இவர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்ளவில்லையெனவும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயப்பட்டோரின் மீதும் இராணுவத்தினர் துப்பாக்கிப்பிரயோகம் செய்துள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த எவரும் இராணுவத்தினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை எனவும் தமது நடவடிக்கைகள் குறித்து இராணுவத்தினர் பொய் கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


கேமரனின் மன்னிப்புக் கோரலுக்கு முழு ஆதரவு வழங்கியுள்ள இராணுவத் தளபதி ஜெனரல் சேர் டேவிட் ரிச்சார்ட், ”13 பொதுமக்களின் இறப்புக்கு வழிவகுத்த அதிகாரிகளினதும் படை வீரர்களினதும் பெரும் தவறு தொடர்பில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை,” எனத் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, இது குறித்து படை வீரர்களை விசாரணை செய்யும் தீர்மானம் நேரடியாக எடுக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லையெனத் தெரிவிக்கும் செய்தியாளர்கள் 38 ஆண்டுகளின் பின்னர் குற்றத்தை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்களைத் திரட்டுவது மிகவும் கடினமெனத் தெரிவித்துள்ளனர்.


5,000 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை தயாரிக்க கிட்டத்தட்ட $285 மில்லியகள் செலவிடப்பட்டுள்ளது. படுகொலைகள் தொடர்பான விசாரணக்கு முன்னாள் பிரதமர் டொனி பிளேர் 1998 ஆம் ஆண்டில் உத்தரவிட்டார்.

மூலம்

[தொகு]