பிரித்தானியாவில் ஒரு நாள் அடையாள பொது வேலை நிறுத்தம்
- 3 மார்ச்சு 2016: இமயமலைப் பகுதியிலிருந்து சட்ட விரோதமாக தாவர விதைகள் கடத்தல்.
- 15 திசம்பர் 2015: சோயசு விண்கலம் முதல் அதிகாரபூர்வ ஐக்கிய ராச்சிய வீரருடன் பறந்தது
- 9 மே 2015: ஐக்கிய இராச்சிய தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை பெற்றது
- 9 ஏப்பிரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்
- 9 ஏப்பிரல் 2015: தலிபான்களால் கடத்தப்பட்ட பிரித்தானியச் செய்தியாளர் மீட்பு
வியாழன், திசம்பர் 1, 2011
பிரித்தானிய அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு பொருளாதாரச் சீர்திருத்தங்களை எதிர்த்து ஏறத்தாழ 20 இலட்சம் அரசுத் துறை ஊழியர்கள் நேற்று மிகப் பெரிய அளவில் ஒரு நாள் அடையாள பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரித்தானியாவின் அன்றாட நடவடிக்கைகள் பாதிப்படைந்தன.
பிரித்தானியாவில் 30 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்த நடத்திய இந்த வேலை நிறுத்தத்தில் பாடசாலை, கல்லூரிகள், சாலை, தொடருந்து, விமான சேவை, மருத்துவத்துறை ஊழியர்கள் பங்கேற்றனர். இதனால் பிரித்தானிய விமான நிலையங்களின் சேவைகள் பாதிப்படைந்தன. நாடெங்கிலும் ஆயிரக்கணக்கான பேரணிகள் நடந்தன.
லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் எல்லைப் பாதுகாப்பு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் வழமையான சேவைகளில் தாமதம் ஏற்பட்டது.
அதேபோன்று கடந்த ஒரு நூற்றாண்டில் முதல் முறையாக பிரித்தானிய ஆசிரியர்கள் நேற்றைய நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரிட்டனின் 80 வீதமான பாடசாலைகள் மூடப்பட்டன. சுகாதாரத் துறையில் தாதிகள் மருத்துவமனை உதவியாளர்கள் என 4 இலட்சம் பேர் அளவில் பங்கேற்றதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்கொட்லாந்தில் மூன்று லட்சம் பொது ஊழியர்கள் பங்கேற்றதோடு வேல்சில் 170,000 ஊழியர்கள் பங்கேற்றதாக தொழிற் சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன. இதேபோன்று இந்த ஆர்ப்பாட்டத்தால் வட அயர்லாந்தில் பேருந்து, தொடருந்து சேவைகள் எதுவிம் இடம்பெறவில்லை எனவும், மூன்றில் இரண்டு பாடசாலைகள் மூடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரன் தலைமையிலான ஆளும் கூட்டணி அரசு அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதத்தில் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு வருவாய்களில் சீர்த்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி, ஓய்வூதியத்திற்காக பொதுத் துறை ஊழியர்கள் அதிகளவில் தங்கள் பங்கைச் செலுத்த வேண்டும். கூடுதல் நேரம் உழைக்க வேண்டும். ஆனால் இதற்கு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதனையடுத்தே பொதுத்துறை ஊழியர்களினால் நேற்று ஒருநாள் வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது.
வேலை நிறுத்தம் குறித்து நேற்றுப் பேசிய நிதித்துறை அமைச்சர் ஜார்ஜ் ஆஸ்போர்ன், 'இந்த வேலை நிறுத்தம் எதையும் சாதிக்கப் போவதில்லை. ஆனால் நமது பொருளாதாரத்தை மேலும் பலவீனப்படுத்தத்தான் செய்யும். இதற்குப் பதிலாக தொழிற்சங்கங்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம்' என்றார்.
1926ல் நடந்த வேலை நிறுத்தத்தில் 30 லட்சம் ஊழியர்கள் கலந்து கொண்டனர். அதையடுத்து இந்த வேலை நிறுத்தம்தான் பிரிட்டினில் இடம்பெற்ற மிகப்பெரிய வேலை நிறுத்தமாக பதிவாகியுள்ளது.
மூலம்
[தொகு]- Public sector strike rallies held across UK , பிபிசி, நவம்பர் 30, 2011
- பிரிட்டனில் அரசுத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம், பிபிசி, நவம்பர் 30, 2011
- Unions claim win in mass UK strike , த அவுஸ்திரேலியன், நவம்பர் 30, 2011
- பொது வேலை நிறுத்தத்தால் முடங்கியது பிரிட்டன் : "திவால் ஆகும் நிலையில் இருக்கிறோம்' நிதியமைச்சர் கவலை , தினமலர் 30, 2011