உள்ளடக்கத்துக்குச் செல்

ஐரீன் சூறாவளி அமெரிக்காவின் நியூயோர்க் நகரை தாக்கியது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஆகத்து 29, 2011

அமெரிக்காவின் நியூயோர்க் நகரை நேற்று ஐரீன் சூறாவளி தாக்கியது. நகரை நெருங்கி வரும்போது அதன் வேகம் மிகவும் குறைந்து விட்டதால் பாதிப்பு பெருமளவு இருக்கவில்லை. எனினும் கனத்த மழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இச்சூறாவளிக்கு இதுவரை அந்நாட்டில் 21 பேர் இறந்துள்ளனர்.


அத்திலாந்திக் பெருங்கடலில் தோன்றிய ஐரீன் எனப்பெயரிடப்பட்ட இந்த சூறாவளி வடக்கு கரோலைனா மாநிலத்தை நேற்று முன் தினம் தாக்கத் தொடங்கியது. சுமார் 960 கிலோமீட்டர் விட்டம் கொண்ட இந்த சூறாவளி மணித்தியாலத்திற்கு 140 கிலோமீற்றர் வேகத்தில் நகருவதாக தெரிவிக்கப்பட்டது. வட கரோலைனாவைத் தாக்கும் போதே அதன் சீற்றம் குறைந்திருந்தது. இந்நிலையில், நியூஜெர்சியில் இருந்து, நியூயோர்க்கை நோக்கி இச்சூறாவளி நகர்ந்தபோது, தனது வலுவை பெருமளவில் இழந்துவிட்டிருந்தது. இதனால் ஐரீன் எச்சரிக்கை சூறாவளியில் இருந்து புயலாக குறைக்கப்பட்டது.


ஐரீன் சூறாவளி குறித்து வடக்கு கரோலைனா, வேர்ஜினியா, மேரிலாந்து, டெலாவேர், நியூஜெர்சி, நியூயோர்க் மற்றும் கனடிக்கட் ஆகிய 7 மாநிலங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான நியூயோர்க்கில் கடந்த இரு தசாப்தங்களில் முதல் தடவையாக சூறாவளி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 8 இலட்சம் மக்கள் வசிக்கும் நியூயோர்க் நகரில் 3 இலட்சத்து 70 ஆயிரம் பேரை வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


நியூயோர்க்கின் முக்கிய விமான நிலையங்கள், பொதுப் போக்குவரத்து நிலையங்கள், பாதாள தொடருந்துப் போக்குவரத்து ஆகியவை நேற்று முன்தினமே நிறுத்தப்பட்டன. வடக்கு கரோலினா முதல் பாஸ்டன் நகர் வரையிலான 9,000 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள ஹட்சன் ஆறு மற்றும் துறைமுகப் பகுதியில் கடல் ஆகியவற்றின் நீர்மட்டம் நேற்று எதிர்பார்த்ததை விட அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால், நகரின் பல தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. ஏழு மாகாணங்களிலும் மொத்தம் 150 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.


மூலம்

[தொகு]
விக்கிப்பீடியா
விக்கிப்பீடியா
விக்கிப்பீடியாவில் இத்தலைப்புக் குறித்து மேலும் கட்டுரைகள் உள்ளன: