சோமாலிய நாடாளுமன்றம் மீது போராளிகள் மோட்டார் தாக்குதல்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மே 17, 2010

இவ்வாண்டில் முதன் முறையாக நேற்றுக் கூடிய சோமாலிய நாடாளுமன்றத்தின் மீது இசுலாமியப் போராளிகள் மோட்டார் தாக்குதலை நடத்தினர். இதனை அடுத்து இடம்பெற்ற மோதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர்.


தலைநகர் மொகதிசுவில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, ஆப்பிரிக்க ஒன்றிய அமைதிப்படையினர் பீரங்கித் தாக்குதலை நடத்தினர்.


முன்னதாக நாடாளுமன்றத்தில் பிரதம மந்திரியைக் குறை கூறிய நாடாளுமன்ற அவைத்தலைவரைப் பதவி விலக வேண்டும் என உறுப்பினர்கள் அங்கு கலவரத்தில் ஈடுபட்டனர்.


நேற்று ஞாயிற்றுக்க்கிழமை நடந்த தாக்குதல் பக்காரா என்ற தலைநகரின் பிரதான சந்தைப் பகுதியில் இருந்து நடத்தப்பட்டது. இப்பகுதி போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.


சில மோட்டார் குண்டுகள் நாடாளுமன்றத்தின் அருகில் வந்து வீழ்ந்ததாகவும் ஆனாலும் கட்டடங்கள் எதுவும் சேதமடையவில்லை எனவும் காவல்துறை அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்தார்.


அமைதிப்படையினருக்கும் போராளிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சண்டையில் இடையில் அகப்பட்ட 20 பொதுமக்கள் காயமடைந்தனர்.

சந்தைப் பகுதியின் சில இடங்கள் தீப்ப்ற்றி எரிந்ததில் அங்கிருந்த பணியாளர்கள் பலர் உயிரிழந்தனர்.


கடந்த மூன்றாண்டுகளாக இடைக்கால அரசுக்கு எதிராக இசுலாமியத் தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர்.

மூலம்[தொகு]