உள்ளடக்கத்துக்குச் செல்

பப்புவா நியூ கினி விமான விபத்தில் மூன்று ஆஸ்திரேலியர்கள் உட்பட நால்வர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், செப்டம்பர் 2, 2010

பப்புவா நியூ கினியின் மிசிமா தீவில் சிறிய ரகப் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் மூன்று ஆஸ்திரேலியர்களும் நியூசிலாந்தைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டனர். ஐந்து பேருடன் சென்ற இந்த விமானம் சீரற்ற காலநிலை காரணமாக ஓடுபாதையை விட்டு விலகி மரங்களுடன் மோதி வெடித்துத் தீப்பற்றியதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.


நியூசிலாந்தைச் சேர்ந்த விமான ஓட்டி கடும் காயங்களுடன் உயிர் தப்பினார். செவ்வாய்க்கிழமை அன்று இவ்விபத்து நடந்துள்ளது. இவ்விபத்தை உறுதிப்படுத்திய ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிமித், ஆஸ்திரேலியத் தூதரக அதிகாரிகள் விபத்து நடந்த இடத்துக்குச் சென்றுள்லதாக தெரிவித்தார்.


இவ்விமானத்தில் பயணம் செய்த ஆஸ்திரேலியர்கள் மிசிமா தீவுக்கருகில் அமைந்திருக்கும் ஆஸ்திரேலிய ரீஃப் பைலட்ஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் என பப்புவா நியூ கினியின் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "இவ்விபத்துக் குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் எமக்குத் தெரியவில்லை, தொடர்பு கொள்வது மிகவும் சிரமமாக உள்ளது", என அவர் தெரிவித்தார்.


கடந்த 12 மாதங்களுக்குள் பப்புவா நியூ கினியில் நடந்த விமான விபத்துக்களில் இது மூன்றாவதாகும். சென்ற ஆண்டு ஆகத்து மாதத்தில் கொக்கோடா என்ற இடத்தில் இடம்பெற்ற விபத்தில் 9 ஆஸ்திரேலியர்கள் உயிரிழந்தனர்.

மூலம்