விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல, நெதர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, அக்டோபர் 22, 2011

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு அல்ல என நெதர்லாந்தின் த ஹேக் மாவட்ட நீதிமன்றம் தீப்பளித்துள்ள அதே வேளையில், புலிகளுக்கு வன்முறையற்ற வகையில் கட்டாயமாக நிதி சேகரித்தமைக்காக ஐந்து டச்சு குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழர்களைக் குற்றவாளிகளெனத் தீர்ப்பளித்திருக்கிறது.


அத்துடன், ஐரோப்பியக் கொள்கையின் அடிப்படையில் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக முத்திரையிடும் வகையில் இல்லை என்று ஹேக் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.


சர்வதேச தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணியமை குண்டுத் தாக்குதல் கொலை என்பவற்றுக்கு துணைபோனமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. "டச்சு சட்டப்படி விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாக வகைப்படுத்தப்பட முடியாது" எனினும் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகள் மீது விதித்திருக்கும் தடையானது இவர்கள் மேல் செல்லுபடியாகும் என்பதனால், விடுதலைப் புலிகளுக்காக இவர்கள் பணம் சேர்த்தமை சட்ட விரோதமாகிறது என்று எழுத்து மூலம் வழங்கிய தீர்ப்பில் நீதிபதிகள் கூறினர்.


விடுதலைப்புலிகளுக்குப் பணப் பங்களிப்பு செய்யாவிடில் ஊருக்குச் செல்ல முடியாது என்று வன்முறையற்ற வழியில் பலவந்தப்படுத்தி விடுதலைப் புலிகளுக்காகப் பணம் வசூலித்தமைக்காக இவர்களுக்கு 2 முதல் 6 ஆண்டுகால சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. பணம் சேகரித்ததில் கணக்கராகச் செயல்பட்ட செல்லையா என்பவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இன்னும் இரண்டரை வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டி இருக்கும். இராமலிங்கம் என்பவருக்கு ஐந்து ஆண்டுகளும், இளவரசன் என்பவருக்கு மூன்று ஆண்டுகளும், லிங்கம் என்பவருக்கு இரண்டு ஆண்டுகளும், மனோ என்பவருக்கு இரண்டரை ஆண்டுகளும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.


தமிழீழ விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை தவறானது என்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக வழுக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், விரைவில் அத்தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்குவதற்கான முதற்படியாக, இன்று ஹேக் மாவட்ட நீதிமன்றம் விடுதலைப்புலிகள் பற்றி வங்கிய தீர்ப்பு பார்க்கப்படும் என்று அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்தனர்.


மூலம்[தொகு]