உள்ளடக்கத்துக்குச் செல்

கேரள சட்ட மன்றத்தில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்கத் தீர்மானம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, திசம்பர் 10, 2011

முல்லைப் பெரியாறு அணை எந்நேரமும் பாதிப்புக்குட்படும் என்பதால் அதற்காக புதியதோர் அணை கட்டப்படவேண்டும் என்றும், அது கட்டி முடிக்கப்படும்வரை தற்போதிருக்கும் அணையின் நீர்மட்டம் 120 அடியாகக் குறைக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை கேரள சட்ட மன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேநேரம் தமிழ்நாட்டிற்கு தற்போது வழங்கப்பட்டுவரும் தண்ணீர் தொடர்ந்து வழங்கப்படுமென்றும் தீர்மானம் கூறுகிறது.


முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள சட்டசபையின் சிறப்புக் கூட்டம் நேற்று கூட்டப்பட்ட போது முதல்வர் உம்மன் சாண்டி தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசுகையில், முல்லைப் பெரியாறு அணை மிகவும் பழமையானது, பலவீனமாக உள்ளது என்றும் இதனால் கேரளாவின் ஐந்து மாவட்ட மக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும், அணை அமைந்துள்ள பகுதியில் தொடரும் நில அதிர்வுகளால் 116 ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து புதிய அணைதான் ஒரே தீர்வு என்றும் கூறினார். மூன்று மணிநேர விவாதத்தை முடித்துவைத்துப் பேசுகையில் முதல்வர் சாண்டி, தமிழ் நாட்டுடன் சுமுக உறவைப் பேணவே கேரளம் விரும்புவதாகவும் பிரச்சினையினை பேச்சுவார்த்தை மூலமே தீர்த்துக்கொள்ள விரும்புவதாகவும் கூறினார்.


அதே நேரம் கேரள நீர்வளத்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசஃப் ‘எந்த இடத்தில் புதிய அணை கட்டப்பட வேண்டுமென தீர்மானித்துவிட்டோம். மத்திய அரசு சுற்றுச்சூழல் பிரச்சினையை உறுதிப்படுத்திவிட்டு அனுமதி வழங்கியதும் எங்கள் செலவிலேயே அணை கட்டி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருவோம் என்றும் கூறியுள்ளார்.


இதனிடையே முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி டிசம்பர் 12-ம் நாள் தமிழகத்தின் மாவட்டத் தலைநகர்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதெனவும், 15ம் தேதி மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பிரமாண்ட மனித சங்கிலிப் போராட்டத்தை நடத்துவது எனவும் நேற்று சென்னையில் கூடிய திமுக செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளும் திருப்தியாக இல்லை. மத்திய அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதாலும் திமுக அதிருப்தியாக உள்ளதாக கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறினார்.


மூலம்

[தொகு]