உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது, சனாதிபதி நாடாளுமன்றத்தில் அறிவிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஆகத்து 25, 2011

இலங்கையில் அமுலில் இருந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதாக அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இது தொடர்பான பிரேரணை ஒன்றை அவர் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். இதனடிப்படையில் நாட்டில் இதுவரை காலமும் அமுலில் இருந்த அவசரகால சட்டம் நீக்கப்படுகிறது.


நாட்டில் இதுவரை காலமும் அமுலில் இருந்த அவசரகாலச் சட்டம், உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்ட போதிலும் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுலிலேயே இருக்கும் என்று அமைச்சரவையின் பதில் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.பாதுகாப்புத் தடைச் சட்டமானது தனியாக உருவாக்கப்பட்ட சட்டமாகும். இதற்கும் அவசரகாலச் சட்டத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


இலங்கையில் அவசரகாலச் சட்டம் 1971ம் ஆண்டு இடம்பெற்ற கிளர்ச்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 2005ம் ஆண்டு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்சுமன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டதன் பின்பு மீண்டும் அமுல்படுத்தப்பட்டது. அவசரகாலச் சட்டத்தை நீக்கும்படி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு அழுத்தங்களை வழங்கி வந்தன. அது மட்டுமல்லாது மனித உரிமை அமைப்பு மற்றும் சர்வேதச மன்னிப்புச் சபை என்பனவும் அவசரகால சட்டத்தை நீக்குமாறு இலங்கைக்கு அழுத்தம் வழங்கி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.


ஐ. நா சபை நிபுணர் குழு அறிக்கையில் கூட அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது. இலங்கை அரசு ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை சர்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையென கூறியிருந்தது. பிற்காலத்தில் சனல் 4 ஆவணப்படத்திலும் கூட இலங்கை அவசரகாலச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்தன.


மூலம்

[தொகு]