மடகஸ்கார் அரசைத் தாம் கைப்பற்றியுள்ளதாக இராணுவக் குழு அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், நவம்பர் 18, 2010

மடகஸ்கார் நாட்டைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக இராணுவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனை அறிவித்த சார்ல்ஸ் அந்திரியானசோவினா என்பவர் சென்ற ஆண்டு அரசுத்தலைவர் ஆண்ட்ரி ராசொய்லினாவை ஆட்சிக்குக் கொண்டுவந்த இராணுவப் புரட்சிக்குத் தலைமை வகித்தவர் ஆவார்.


தாம் அரசைக் கலைத்துள்ளதாகவும், இராணுவ ஆட்சிக் குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


ஆனாலும் கிளர்ச்சிக்காரர்களின் அறிவிப்பை நிராகரித்துள்ள ராசொய்லினா, இவர்களின் அச்சுறுத்தலுக்குத் தாம் பயப்படவில்லை எனக் கூறியுள்ளார். புதிய அரசியலமைப்புக்கான பொது வாக்கெடுப்பைக் குழப்புவதற்காக இராணுவத்தில் ஒரு சிறு குழுவே இவ்வாறு கிளர்ந்துள்ளது என அவர் கூறினார்.


கடந்த பல ஆண்டுகளாக மடகஸ்காரில் அரசியல் திரத்தன்மை அற்ற நிலை காணப்படுகிறது. அரசுத்தலைவர் ராசொய்லினா எதிர்க்கட்சிகளுடன் இணக்கப்பாட்டுக்கு வர மறுத்துள்ள காரணத்தினால், இராசதந்திர வட்டாரங்களால் விலத்தி வைக்கப்பட்டுள்ளார்.


நாட்டில் அரசியல் இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டும் எனவும், அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் எனவும், வெளிநாட்டுக்கு சென்றவர்கள் அனைவரும் திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் இராணுவக் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த கேர்ணல் சார்ல்ஸ் அந்திரியானசோவினா தெரிவித்தார்.


தலைநகரில் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள இராணுவத் தளம் ஒன்றில் இருந்து இவர் இந்த அறிக்கையை வாசித்தார் எனச் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.


தொலைக்காட்சி, மற்றும் வானொலிகள் தமது வழமையான ஒலிபரப்புகளை மேற்கொண்டுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். அரசுத்தலைவர் மாளிகை அருகே அமைதி நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


புதிய அரசியலமைப்புத் திட்டம் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படும் வரை ஆண்ட்ரி ராசொய்லினா பதவியில் இருப்பதற்கு வழி வகுக்கிறது. பொது வாக்கெடுப்பை மூன்று முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன.


மூலம்[தொகு]