மெக்சிக்கோவில் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த 167 உடல்கள் மீட்கப்பட்டன

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மார்ச்சு 12, 2012

மெக்சிக்கோவின் சியாப்பஸ் என்ற தென் மாநிலத்தில் குகை ஒன்றில் இருந்து அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட 167 உடல்களின் எச்சங்கள் பண்டைய இடுகாடு ஒன்றின் பகுதிகளே என அந்நாட்டின் மானிடவியலாளர்கள் அறிவித்துள்ளனர்.


குவாத்தமாலா நாட்டின் எல்லையில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள குகை ஒன்றில் இவற்றைக் கண்டுபிடித்த உள்ளூர் மக்கள் இது குறித்து அதிகாரிகளுக்கு அறிவித்தனர்.


இந்த உடல்களைப் பரிசோதனை செய்த தேசிய மானிடவியல் கழகம் இவை கிபி 8ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனக் கூறியிருக்கிறது. அங்கு கண்டுபிடிக்கப்பட்ட மட்கலங்கள் மூலம் இவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டுபிடிக்க முடியும் என அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.


ஆரம்பத்தில் இந்த உடல்கள் குவாத்தமாலாவில் 1960-1996 காலத்தில் இடம்பெற்ர உள்நாட்டுக் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என நம்பப்பட்டது. ஆரம்பக் கட்ட ஆய்வுகள் இவ்வுடல்கள் 50 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் எனக் கூறின. ஆனாலும், தடயவியல் சான்றுகளின் படி, இவை ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த உடல்களின் பால், வயது, மற்றும் சமூகம் சார்ந்த தகவல்களைப் பெறுவதற்கு அறிவியலாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.


மூலம்[தொகு]