உள்ளடக்கத்துக்குச் செல்

2008 மும்பை தாக்குதல்: கசாப்பின் தூக்கு தண்டனை உறுதி

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், பெப்பிரவரி 22, 2011

2008 மும்பை தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் உயிருடன் பிடிபட்ட ஒரே ஒரு நபரான அஜ்மல் கசாப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. கசாப் மீதான வழக்கை விசாரித்த மும்பை தனி நீதிமன்றம் தூக்குத் தண்டனை அளித்து உத்தரவிட்டது. இந்தத் தண்டனை தற்போது உறுதிப்படுத்தப்படுவதற்காக மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. நேற்று அந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.


இந்தியாவுக்கு எதிராக யுத்தம் தொடுத்தது, பலரைக் கொலை செய்தது, தேசத்துக்கு எதிரான சதி வேலையில் ஈடுபட்டது உள்ளிட்ட கசாப் மீதான குற்றத்தை உறுதி செய்த நீதிபதிகள் கசாப்பின் மேன்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.


தற்போதைய தீர்ப்பை எதிர்த்து கசாப் இந்திய உச்சநீதிமன்றத்தில் மேற்கொண்டு முறையீடு செய்ய அனுமதி உண்டு என்றும் அவர் அப்படி மேல்முறையீடு செய்ய முடிவெடுத்தால் அவருக்கு இலவச சட்ட உதவி செய்துதரப்படும் என்றும் மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி, கசாப் உள்பட 10 பேர் மும்பைக்குள் புகுந்து தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டு 166 பேரைக் கொன்றனர். 3 நாள் நீடித்த இந்தத் தாக்குதலில், கசாப் மட்டும் உயிருடன் பிடிபட மற்ற 9 பேரும் இந்திய கமாண்டோப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.


உயர்நீதிமன்றத்தில் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதை எதிர்த்து அடுத்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய கசாப்புக்கு வாய்ப்பளிக்கப்படும். அதிலும் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டால், மறு ஆய்வு மனு தாக்கல் செய்யலாம். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டால், தூக்கிலிடுவதற்கு நாள் குறிக்கப்படும். இருப்பினும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் என பல்வேறு வசதிகள் தூக்குத் தண்டனைக் கைதிகளுக்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இதேநேரம் மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த பஹீம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகிய இரு இந்தியர்களையும் விடுதலை செய்து மும்பை தனி நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதை எதிர்த்து அரசுத் தரப்பு தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனு மீதும் நேற்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]