உள்ளடக்கத்துக்குச் செல்

வத்திக்கானிலிருந்து தீபாவளி வாழ்த்துச் செய்தி

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, அக்டோபர் 22, 2011

"பல்சமய உரையாடல் சங்கம்" என்னும் பெயரில் வத்திக்கானில் செயல்பட்டு வருகின்ற கத்தோலிக்கத் திருச்சபை அமைப்பு இந்தியாவிலும் பிற நாடுகளிலும் தீபாவளி கொண்டாடுகின்ற அனைவருக்கும் "உளமார்ந்த வாழ்த்துகளை" தெரிவித்துக் கொண்டுள்ளது. சமயங்களின் பெயரால் எழுகின்ற கலவரங்களைத் தவிர்க்க வேண்டுமானால் எல்லா மக்களும் தாம் தெரிந்துகொண்ட மதத்தைக் கடைப்பிடிப்பதற்கான.உரிமை உண்டு என்பது ஏற்கப்பட்டு, செயல்முறை ஆக வேண்டும் என்று அச்சங்கம் தெரிவித்தது.


"ஒளியனைத்துக்கும் ஊற்றாய் இருக்கின்ற இறைவன் உங்கள் உள்ளங்களையும், இல்லங்களையும், சமூகங்களையும் ஒளிர்வித்து, உங்களுக்கு அமைதியையும் நல்வளத்தையும் நல்குவாராக!" என்று அக்டோபர் 20ஆம் நாள் "பல்சமய உரையாடல் சங்கம்" வெளியிட்ட வாழ்த்துச் செய்தி கூறுகிறது.


அச்சங்கத்தின் தலைவர் கர்தினால் ழான்-லூயி தோரான் மற்றும் செயலர் பேராயர் பியெர் லூயிஜி செலாட்டா ஆகியோரால் கையொப்பமிடப்பட்ட அச்செய்தி உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையின் பெயரால் வெளியிடப்பட்டது.


மூன்று நாள் தீபாவளிக் கொண்டாட்டம் அக்டோபர் 26ஆம் நாள் தொடங்குகிறது. வத்திக்கானில் அமைந்துள்ள "பல்சமய உரையாடல் சங்கம்" ஒவ்வொரு ஆண்டும் இத்தகு வாழ்த்துச் செய்தியை வழங்குகிறது.


மதச் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும்


இந்த ஆண்டுச் செய்தி "மதச் சுதந்திரம்" என்னும் மையப் பொருளைக் கொண்டுள்ளது. "ஒரு குறிப்பிட்ட குழுவினர் தாம் தெரிந்துகொண்ட மதத்தைப் பின்பற்றுகிறார்கள் என்பதற்காக அவர்களைப் பற்றித் தவறான எண்ணங்களையும் முற்சாய்வான கருத்துக்களையும் கொண்டு, அவர்களை வெறுப்பதும் ஒதுக்கிவைப்பதும் துன்புறுத்துவதுமாகிய செயல்களில் ஈடுபடுவது முறையாகாது" என அச்செய்தி கூறுகிறது.


மதச் சுதந்திரம் ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள அடிப்படை உரிமையாகும். "எங்கே மதச் சுதந்திரம் ஆபத்துக்கு உள்ளாகிறதோ, மறுக்கப்படுகிறதோ, அங்கே மற்றெல்லா உரிமைகளும் மறுக்கப்படும் ஆபத்து எழுகிறது. தனியாரோ, குழுக்களோ, சமூகங்களோ, நிறுவனங்களோ யாரையும் ஒரு குறிப்பிட்ட சமயத்தை ஏற்றுக் கடைப்பிடிக்க நிர்ப்பந்தம் செய்வது முறையாகாது" என்று அந்த வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.


இந்தியாவின் சில பகுதிகளில் கிறித்தவ எதிர்ப்பு வன்முறை நடந்ததன் பின்னணியில் மேற்கூறிய செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கிறித்தவர்களுக்கு எதிராகச் சில தீவிரவாத இந்துக்கள் வன்முறையில் ஈடுபட்டு அவர்களை வீடுகளிலிருந்து துரத்தி, அவர்களது வழிபாட்டு இடங்களை அழித்தனர்.


"பல்சமய உரையாடல் சங்கம்" வெளியிட்ட செய்தி, மதச் சுதந்திரம் தனிமனிதரோ குழுக்களோ தனிப்பட்ட முறையிலும் பொது வாழ்விலும் தாம் தெரிந்துகொண்ட சமயத்தை வெளிக்கட்டாயமின்றி கடைப்பிடிக்கவும் அறிக்கையிடவும் உரிமைகொண்டுள்ளதைக் கோடிட்டுக் காட்டுகிறது. அச்சுதந்திரத்தை ஆட்சியாளர்களும், குழுக்களும் தனிமனிதரும் மதிக்க வேண்டும்.


மதச் சுதந்திரத்தை மதிப்பதே அமைதிக்கு வழி


மதச் சுதந்திரம் மதிக்கப்படாவிட்டால் "உண்மையான, நிலையான அமைதி" ஏற்பட இயலாது என்றும் அச்செய்தி கூறுகிறது. எனவே, நீதியின் அடிப்படையில் அமைந்ததொரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றால், சமய நம்பிக்கையுடையோர் அவர்களோடு வாழ்கின்ற பிற மக்களோடு இணைந்து ஆர்வத்தோடு ஒத்துழைக்க முன்வர வேண்டும். சமய நம்பிக்கையுடையோர் மனித உயிரைக் காப்பதிலும், குடும்பத்தின் மாண்பைப் பேணுவதிலும், குழந்தைகளுக்குக் கல்வி வழங்குவதிலும், பொதுவாழ்வில் நேர்மையை வளர்ப்பதிலும், இயற்கை வளங்களை வீணடிக்காமல் இருப்பதிலும் கருத்தைச் செலுத்தி, பொது நலனை முன்னேற்றிட தம்மையே அர்ப்பணிக்க வேண்டும்.


"எல்லா மனிதருக்கும் மதச் சுதந்திரம் உண்டு என்பதை உலக நாடுகளின் தலைவர்கள் மதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, மதச் சுதந்திரத்தைப் பேணுவது நமது கூட்டுப்பொறுப்பு என்பதை உணர்ந்து ஒத்துழைக்க முன்வருவோம். தீபாவளிக் கொண்டாட்டம் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான கொண்டாட்டமாக அமையட்டும்" என்று "பல்சமய உரையாடல் சங்கம்" வாழ்த்துக் கூறியுள்ளது.


மூலம்

[தொகு]