உள்ளடக்கத்துக்குச் செல்

பிஜியின் முன்னாள் பிரதமர் கராசேயிற்கு ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சிறைத்தண்டனை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஆகத்து 3, 2012

பிஜியின் முன்னாள் பிரதமர் லைசீனியா கராசே மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.


இவர் மீது மொத்தம் ஒன்பது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. பதவியை முறைகேடாகப் பயன்படுத்தியமை, 1990களில் அரசு முதலீட்டு நிறுவனம் ஒன்றின் பணிப்பாளராக இருந்த போது ஊழல்களில் ஈடுபட்டமை, மற்றும் சிறுபான்மை இந்திய வம்சாவளியினருக்கு எதிராக பிஜி இனத்தவர்களுக்கு சாதகமாக செயற்பட்டதன் மூலம் இனமோதலை தூண்டியமை, தன்னைத்தானே பிரதமராக நியமித்துக்கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இக்குற்றச்சாட்டுகளை கராசே மறுத்துள்ளார். இவ்வழக்கை விசாரித்த பிஜியின் உச்சநீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ கராசேயிற்கு ஓராண்டு கால சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.


71 வயதான கராசே பிஜியின் கடைசியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆவார். இவர் 2000 ஆம் ஆண்டில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.


தற்போது பதவியில் உள்ள இராணுவ ஆட்சியாளர் கொமடோர் பிராங்க் பைனிமராமா 2014 ஆம் ஆண்டில் தேர்தல்கள் இடம்பெறும் எனக் கூறி வருகிறார்.


2006 இராணுவப் புரட்சியை அடுத்து பொதுநலவாய அமைப்பில் இருந்து பிஜி இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்நாட்டின் மீது பன்னாட்டுப் பொருளாதாரத் தடைகளும் அமுலில் உள்ளன.


மற்றுமொரு முன்னாள் பிரதமர் மகேந்திரா சவுத்திரி மீதும் 1.5 மில்லியன் ஆத்திரேலிய டாலர்களை அரசிடம் கையளிக்கத் தவறியமை உட்பட மூன்று ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஆனாலும், பணமாற்றுக் குற்றச்சாட்டு மிக நீண்ட காலத்துக்கு இடம்பெற்றதாகக் கூறி அக்குற்றச்சாட்டில் இருந்து சென்ற வாரம் அவர் விடுவிக்கப்பட்டார்.


2009 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவும், நியூசிலாந்தும் தமது தூதர்களை திருப்பி அழைத்திருந்தன. ஆனாலும், சென்ற வாரம் இவ்விரு நாடுகளும் பிஜியுடன் மீண்டும் முழுமையான தூதரக உறவுகளைப் புதுப்பிக்கவுள்ளதாக அறிவித்திருந்தன.


மூலம்

[தொகு]