உள்ளடக்கத்துக்குச் செல்

காசா நோக்கிச் சென்ற நிவாரணக் கப்பல்கள் மீது இசுரேல் தாக்குதல், 10 பேர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூன் 1, 2010

காசாப் பகுதியில் வசிக்கும் பாலத்தீன மக்களுக்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஆறு கப்பல்களை பன்னாட்டுக் கடற்பரப்பில் வைத்து நேற்று திங்கட்கிழமை இசுரேலியப் போர்க் கப்பல் தாக்கியதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.


சுதந்திர கப்பற் தொகுதியின் கொடி

காசாவிலுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு இப்பொருட்கள் கொண்டு வரப்பட்டன. ஐரோப்பிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பாலத்தீனத்துக்கு ஆதரவான கிட்டத்தட்ட எழுநூறு பேர் இக்கப்பல்களில் இருந்தனர்.


இசுரேலின் இந்த நடவடிக்கைக்கு சுயாதீன விசாரணை வேண்டும் என இன்று கூடிய ஐநா பாதுகாப்புச் சபையின் சிறப்புக் கூட்டம் அறிவித்துள்ளது.


ஐநா இந்த அறிக்கையை வெளியிட்ட சற்று நேரத்துக்குள் பல காசா போராளிகள் எல்லையைக் கடந்து இசுரேலினுள் நுழைந்தனர். இதனையடுத்து இடம்பெற்ற மோதல்களில் இரண்டு போராளிகள் கொல்லப்பட்டதாக இசுரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.


காசாவுக்குப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பற்தொகுதி மீது பன்னாட்டுக் கடற்பரப்பில் வைத்து இசுரேல் மேற்கொண்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டமைக்கும், காயமடைந்தமைக்கும் பாதுகாப்புச் சபை ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறது.

—ஐநா பாதுகாப்புச் சபை அறிக்கை

இசுரேலிய உதவி வெளிவிவகார அமைச்சர் டனி அயலோன் கருத்துத் தெரிவிக்கையில், "இக்கப்பல்களை ஒழுங்கு செய்தவர்கள் உலக ஜிகாட் அமைப்பு, அல்கைடா, மற்றும் ஹமாஸ் இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளவர்கள். ஆயுதக் கடத்தல், மற்றும் பயங்கரவாதம் தொடர்பாக இவர்கள் நெடுங்கால வரலாற்ரைக் கொண்டுள்ளவர்கள்", எனத் தெரிவித்தார். இசுரேலின் கட்டுப்பாட்டை சட்டவிரோதமாக இக்கப்பல்கள் மீறியுள்ளதாகவும், இக்கப்பல்களை காசா சென்றடைய விட மாட்டோம் என்றும் இசுரேல் தெரிவித்தது.


துருக்கிய கப்பலிலிருந்து அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வந்த தகவலின் படி இசுரேலியக் கடற்படையினர் கண்மூடித் தனமாக சுட்டதில் கப்பல் கேப்டன் காயமுற்றதாக கூறப்பட்டது.


இசுரேலியத் தாக்குதலுக்கு ஹமாஸ் அரசாங்கத் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இசுரேலின் இச்செயல் இருதரப்பு உறவை பாதிக்கும் செயலாகும் என்று துருக்கி அரசாங்கம் அறிவித்துள்ளது.


"உயிரிழப்பு ஏற்பட்டது வருந்தத்தக்கது, எனினும் இசுரேலியப் படையினர் தமது கடமையைத்தான் செய்தார்கள்", என இசுரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு தெரிவித்தார். கனடாவுக்கான தனது சுற்றுலாவை இடையில் முடித்துக் கொண்டு அவர் நாடு திரும்பினார். இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமாவுடன் இடம்பெறவிருந்த சந்திப்பையும் அவர் இரத்துச் செய்துள்ளார்,


2007 ஆம் ஆண்டு காசாவை ஹமாஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் அந்த எல்லைகளை இஸ்ரேல் கடுமையாகக் கண்காணிப்பதுடன் பொருளாதாரத் தடைகளையும் கொண்டு வந்தது. இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் 15,000 டன் உதவிப் பொருள்கள் காசா பகுதிக்குள் அனுமதிக்கப் படுவதாக இஸ்ரேல் கூறுகிறது.


ஆனால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு தேவைப்படும் உதவிப் பொருள்களில் இது கால்வாசியே என்று ஐநா கூறுகிறது.


மூலம்

[தொகு]