அமெரிக்க இந்தியர் சித்தார்த்தா முக்கர்ஜியின் நூலுக்கு புலிட்சர் பரிசு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஏப்பிரல் 19, 2011

இந்திய அமெரிக்க மருத்துவரான சித்தார்த்தா முக்கர்ஜி எழுதிய புற்றுநோயைப் பற்றிய நூலுக்கு புலிட்சர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


புலிட்சர் விருது

முக்கர்ஜியின் The Emperor of All Maladies: A Biography of Cancer என்ற நூல் புற்றுநோயின் வரலாற்றையும் மருத்துவர்கள அதனை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பது குறித்தும் விளக்குகிறது. பண்டைய எகிப்திய காலம் முதல் தற்போதைய நவீன காலம் வரை புற்றுநோய்ச் சிகிச்சை முறைகள் இந்நூலில் எழுதப்பட்டுள்ளது. இந்நூல் ஏற்கனவே வேறு பல விருதுகளையும் பெற்றுள்ளது. ஓப்ரா இதழ், மற்றும் நியூயார்க் டைம்ஸ் இதழ் ஆகியவற்றின் "2010 இன் முதல் 10 நூல்கள்" பட்டியல்களிலும், டைம் இதழின் புனைகதைகளல்லாத முதல் 10 நூல்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. புனைகதையல்லாத பொதுப் பகுதிக்குக் கீழ் இந்தப் புலிட்சர் பரிசு $10,000 வழங்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் புதுதில்லியில் பிறந்த 41 அகவையுடைய முக்கர்ஜி கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய் மருத்துவராகவும், பேராசிரியராகவும் ஆகவும் பணியாற்றுகிறார். 2011 ஆம் ஆண்டில் டைம் இதழ் தெரிவு செய்த முதல் 100 செல்வாக்குள்ள மனிதர்கள் பட்டியலில் இவர் பெயரும் இடம்பெற்றுள்ளது.


புலிட்சர் பரிசு பத்திரிகைத்துறை, இலக்கியம், இசையமைப்பு என்பவற்றுக்காக அமெரிக்காவில் வழங்கப்படும் ஒரு விருது ஆகும். இது மேற்படி துறைகளுக்கான மிக உயர்ந்த தேசிய கௌரவமாகக் கருதப்படுகின்றது. நியூயார்க் நகரத்தில், கொலம்பியா பல்கலைக்கழகத்தால் இது நிர்வகிக்கப்பட்டு வருகிறது.


மூலம்[தொகு]