சோமாலியாவில் பஞ்சம் - ஐ.நா. அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூலை 21, 2011

கிழக்கு ஆபிரிக்காவின் சோமாலியாவில் 3.7 மில்லியன் பேர் உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி பஞ்சத்தால் வாடி வருவதாக ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது.


வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள்

கிழக்கு ஆபிரிக்க நாடுகளான சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் கென்யாவில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் உணவு தேடி இடம்பெயர்ந்து வருகின்றனர். இதில் சோமாலியா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சோமாலியாவில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலை குறித்த அறிவிப்பை ஐநா வெளியிட்டுள்ளது. இதன்படி சோமாலியாவின் மொத்த சனத்தொகையின் பாதிப்பேர், அதாவது 3.7 மில்லியன் பேர் இந்த வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதில் அல்-கைதா அமைப்பின் பின்னணியைக் கொண்ட அல்-சபாப் ஆயுதக் குழுவினரின் கட்டுப்பாட்டிலுள்ள தெற்கு சோமாலியா பகுதியில் மாத்திரம் 2.8 மில்லியன் பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா மேற்கொண்டுள்ள கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது. தென் பகூல் மற்றும் ஷபெல்லே பகுதிகளில் உள்ள 2.8 மில்லியன் பேர் பஞ்சத்தில் வாடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் சோமாலியாவில் இருந்து உணவு தேடி நாளொன்றுக்கு 5000 பேர் ஆளவில் அண்மையிலுள்ள கென்யா மற்றும் எத்தியோப்பியா அகதி முகாம்களுக்கு வந்தவண்ணம் உள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோர் கென்யாவில் அமைக்கப்பட்டுள்ள டெடாப் அகதி முகாமுக்கு வருகை தருகின்றனர். உலகிலேயே மிகப் பெரிய அகதி முகாமாக கருதப்படும் இதில் சுமார் 90,000 பேர் தங்குவதற்கே வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், தற்போது இங்கு 400,000 பேரளவில் உள்ளதாக ஐ. நா கூறியுள்ளது. கிழக்கு ஆபிரிக்காவில் ஏற்பட்டுள்ள வரட்சி நிலை காரணமாக கென்யா, எதியோப்பியா, சோமாலியா, உகண்டா மற்றும் டிஜிபெளடி நாடுகளில் மொத்தமாக 11 மில்லியன் பேர் அளவில் பஞ்சத்தால் வாடுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.


இதேவேளை, இந்த வறட்சி நிவாரண உதவியாக அமெரிக்கா நேற்றைய தினத்தில் மேலும் 28 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது. ஏற்கனவே தாம் 437 மில்லியன் டொலர் பெறுமதியான உதவிகளை வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளதாக அமெரிக்க இராசாங்க செயலாளர் இலரி கிளின்டன் தெரிவித்துள்ளார். எனினும் இந்த உதவி அங்கு ஏற்பட்டுள்ள அவல நிலைக்கு போதுமானதாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இந்நாட்டில், தினமும் பத்தாயிரம் குழந்தைகளில் நான்கு குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்க நேரிடுகின்றன. இக்குறைபாட்டால், 30 சதவீத குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. உலகில், ஒவ்வொரு முறையும், பஞ்சம் பற்றி அறிவிப்பதில் ஐ.நா., மிகுந்த கவனம் எடுத்துக் கொள்கிறது. 1992ம் ஆண்டுக்குப் பின்னர், தற்போது சோமாலியாவை அறிவிக்க ஐ.நா., முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, ஆப்ரிக்க விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி அமைச்சர் ஜான்னி கார்சன் கூறுகையில், "அல் ஷபாப் தீவிரவாத அமைப்பிடம் உண்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா அல்லது அமெரிக்க உதவிப் பொருட்களின் மீது வரி விதிக்குமா என்பதை அமெரிக்கா கவனித்து வருகிறது' என்றார்.


மூலம்[தொகு]